கொல்கத்தா, மார்ச் 9-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநில  25ஆவது மாநாடு புதனன்று நிறைவடைந்தது. மாநாடு,மக்கள் ஒற்றுமையை வலுப்படுத்தி, திரிணாமுல் காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டையும் எதிர்த்திட அறைகூவல் விடுத்துள்ளது.

மாநாட்டில் டாக்டர் சூர்யகாந்த்மிஷ்ரா மீளவும் மாநில செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.

பிமன் பாசு, முகமது சலீம் உட்பட 80 பேர் கொண்ட மாநிலக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.   இதில் தலித் பெண்ணிற்கான ஓர் இடம் தவிர மற்றவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.  பழைய மாநிலக்குழுவிலிருந்தவர்களில் 20 பேர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.  புதிதாகப் 17 பேர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

மேற்கு வங்க மாநிலத்தில் மாநிலக்குழுவில் அங்கம் பெறும் தோழர்களின் அதிகபட்ச வயது 75 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படையில் மாநிலத்தின் மூத்த தோழர்களான புத்ததேவ் பட்டாச்சார்யா, சியாமள் சக்ரவர்த்தி. மதன் கோஷ், தீபக் சர்க்கார், பாசுதேவ் ஆச்சார்யா, காந்தி கங்குலி, அசிம் தாஸ்குப்தா, நிருபம் சென் ஆகிய எட்டு பேர் மாநிலக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

தற்போது மாநிலக்குழுவில் அங்கம் வகிப்பவர்களின் பிமன் பாசு மட்டும் 77 வயதுடையவர். இது தொடர்பாக மாநில செயலாளரான  சூர்ய காந்த் மிஷ்ரா, “தோழர் பிமன்பாசுவிற்காக மட்டும் அதிகபட்ச வயது வரம்பு தளர்த்தப்பட்டிருக்கிறது. ஏனெனில் அவர் இளம் தலைவர்களைவிட சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு தலைவராவார்,” என்று கூறினார். மேலும், “கட்சி மாநில அளவில் இளைஞர்கள், நடுத்தர வயதுடையவர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்களின் குழுவை வளர்த்தெடுத்திட வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது,“ என்றும் கூறினார்.

செய்தியாளர்களிடையே மேலும் அவர் கூறியதாவது:

“கட்சியில் இதற்குமுன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, கட்சியின் மாநில அளவிலான ஸ்தாபன பிளீனம் பிறப்பித்த வழிகாட்டுதலின்கீழ், கிளை மட்டத்திலிருந்து, மாநிலக்குழு வரையிலும்  அனைத்து ஸ்தாபனங்களும் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன.

திரிணாமுல் காங்கிரசும், பாஜகவும் ஒரே குறிக்கோளைக் கொண்டிருக்கும் இரு தலை பாம்பு அல்லது இரு தலை உள்ள அரக்கனாகும். எனவே இவ்விரண்டு கட்சிக்கும் எதிராக ஒரே சமயத்தில் போராட்டங்களை எதிர்வரும் காலங்களில் திட்டமிட வேண்டும் என்றும் மாநாடு முடிவு செய்திருக்கிறது. இது வரவிருக்கும் பஞ்சாயத்துத் தேர்தலிலிருந்தே தொடங்கிவிடும்”

இவ்வாறு டாக்டர் சூர்யகாந்த் மிஷ்ரா கூறினார். அவருடன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் முகமது சலீம் உடன் இருந்தார்.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.