க.சுவாமிநாதன்
மார்ச் 8, 2018 சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இந்து பிசினஸ் லைன் வெளியிட்டுள்ள சிறப்பு முழுப்பக்கத்தில் இடம் பெற்றுள்ள தகவல்களின் தொகுப்பு இது.• 2017 சர்வதேச மகளிர் தினத்திற்கான கருத்துருவாக “ மாற்றம் கொண்டு வருகிற துணிவோடு இரு” (Be bold for change) என்பதாக இருந்தது. ஹாலிவுட் பிரபல நடிகை ஆஸ்லி ஜூட் மிகப்பெரும் திரைப்படத் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனமான மீராமாக்ஸின் ஸ்தாபகர்களில் ஒருவரான ஹார்வி வெயின்ஸ்டைன் தனது திரைத்துறை நுழைவுக் காலங்களில் பாலின துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். அவரைத் தொடர்ந்து பல ஹாலிவுட் நடிகைகளும், பிறதுறை சார்ந்த பெண்களும் துணிச்சலாக தாங்கள் சந்தித்த இன்னல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

• உலகம் முழுவதிலும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் பாலின பாரபட்சத்தை உள்ளடக்கியதாக இருக்கிறது. உலகப் பொருளாதார மாமன்றத்தின் (World economic forum) 2017 அறிக்கையின்படி பாலின இடைவெளி முழுமையாகச் சரிசெய்யப்பட 217 ஆண்டுகள் பிடிக்கலாம் என்று கூறியுள்ளது. அரசியலிலுள்ள பாலின இடைவெளி சரிசெய்யப்பட 99 ஆண்டுகள் பிடிக்குமென்றும் அதே அறிக்கை கூறுகிறது. கல்வியில் பாலின இடைவெளி சரியாக 13 ஆண்டுகள் எடுக்கலாமென அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. 2006 லிருந்து 106 நாடுகள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டு இவ்வறிக்கை மதிப்பீடுகளைச் செய்துள்ளது.•இந்தியப் பொருளாதாரத்திலுள்ள பாலின இடைவெளியை 2015 க்குள்ளாக 25 சதவீதம் குறைப்பதென்ற இலக்கோடு முன்னேறினால் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 27 சதவீதம் அதிகரிப்பு ஏற்படும் என ஐ.எம்.எப் கூறியுள்ளது. உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியும் பாலின இடைவெளியை 25 சதவீதம் குறைத்தால் 5.3 டிரில்லியன் டாலர் (3,44,50,000 கோடி ரூபாய்கள் ) உயருமென மதிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே பாலின இடைவெளியைக் குறைப்பது பெண்களின் நலனுக்கானது மட்டுமல்ல. பொருளாதார மேம்பாட்டிற்கும் பயன்படுவதாகும்.

• 15 வயதுக்கு மேற்பட்ட உழைப்பாளிகளில் ஆண்கள் 75.5 சதவீதம். பெண்கள் 27.4 சதவீதம். அதிகமாக பெண்களை ஈர்க்கிற வங்கித்துறையில் கூட அதிகாரிகளில் 21 சதவீதம், கிளார்க்குகளில் 27 சதவீதம், நான்காம் பிரிவு ஊழியர்களில் 14 சதவீதம் மட்டுமே பெண்கள் உள்ளனர். அதாவது 13.01 லட்சம் வங்கிப் பணியாளர்களில் 2.87 லட்சம் பேர் மட்டுமே பெண்கள்.

• நிறுவனங்களின் உடமை என்ற அளவுகோலிலும் பெண்கள் பின்தங்கியே உள்ளனர். பெண்கள் வசம் உள்ள நிறுவனங்கள் 21.5 சதவீதம் மட்டுமே. பெண்களிடம் உடமை உள்ள நிறுவனங்களில் பணியாற்றுகிற பெண் தொழிலாளர்கள் 18.3 சதவீதமே ஆவர்.• குரூப் 1 போன்ற உயர் பதவிகளிலும் இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. வனத் துறை சேவையில் 4 சதவீதம், அயலுறவு சேவையில் 8 சதவீதம், காவல்துறை சேவையில் 9 சதவீதம், இந்திய ஆட்சிப்பணியில் 17 சதவீதம், புள்ளியியல் சேவையில் 24 சதவீதம், பொருளாதார சேவையில் 30 சதவீதம் என்ற அளவில் பெண் பிரதிநிதித்துவம் உள்ளது.

• அரசியலிலும் பெரிய அகழி உள்ளது. கேபினட் அமைச்சர்கள் 27 பேரில் 6 பெண்கள். மத்திய இணை – தனிஅமைச்சர்கள் 48 பேரில் 3 பெண்கள். கடந்த ஆண்டு 9 சட்டமன்றங்களுக்கு நடைபெற்ற தேர்தல்களில் ஏற்கெனவே இருந்த பெண்களின் எண்ணிக்கையான 83 என்பது 76 ஆகச் சரிந்துள்ளது. அதாவது 7.9 சதவீதத்திலிருந்து 7.3 சதவீதமாக சரிவு ஏற்பட்டுள்ளது.

• பெண் தொழில் முனைவோர் குறித்த “மாஸ்டர் கார்டு ஆய்வு” இந்தியாவை மொத்த நாடுகளான 57-ல் , 52வது ரேங்கில் வைத்துள்ளது. அமெரிக்கா 4வது இடத்திலும், சீனா 29வது இடத்திலும் உள்ளன. இது குறித்து “மாஸ்டர் கார்டு” நிறுவனத்தில் சந்தை மற்றும் தகவல் தொடர்பு துணைத் தலைவராக உள்ள மானசி நரசிம்மன் கூறுகையில்,“அமெரிக்கா, சீனா போன்று நம்மைவிட ரேங்கில் முன்னணியில் உள்ள நாடுகளிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். உழைப்பாளிகளில் பெண் பங்கேற்பு,இடைநிலைக்கு மேற்பட்ட கல்வி வாய்ப்பு, நிதிச் சேவைகள் ஆகியனவற்றை பெண்களுக்கு உறுதி செய்ய வேண்டும்” என்கிறார்.• இவ்வளவு இடர்களுக்கு மத்தியில் பெண்கள் தங்கள் உழைப்பால் பலதுறைகளிலும் பாராட்டத்தக்க உயரங்களையும் எட்டியுள்ளனர். பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (DRDO) 2011-ல் அக்னி -4 ஏவுகணையை வெற்றிகரமாகச் செலுத்தியபோது அதில் முக்கியப்பங்கை வகித்த பெண்மணிடெஸ்ஸி தாமஸ் “அக்னி மகள்” என்றே அழைக்கப்படுகிறார். இன்றும் 12 பெண்கள் அத்துறையின் முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர்.மஞ்சுளா, சசிகலா, சித்ரா ராஜகோபால் ஆகியோர் பொதுஇயக்குநர்கள் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளனர்.

• ஆய்வக இயக்குநர்களாகவும் பெண்கள் உயர்ந்துள்ளனர். “செயற்கை அறிவூட்டல் மற்றும் இயந்திர மனிதர்கள் ” மையம் பெங்களூரில் உள்ளது. இதன் தலைமைப் பொறுப்பில் மணிமொழி தியோடார் இருக்கிறார். உயிரி எரிசக்தி ஆய்வு மையத்தின் (உத்தரகாண்ட், ஹால்ட்வானி) தலைமையில் மதுபாலா இருக்கிறார். மறை குறீயிட்டு தகவலியலில் அனு கோஷ்லா, பாதுகாப்பு ஆவண உருவாக்க அறிவியலில் அல்கா சூரி, மனித வள மேம்பாட்டில் கினா கோகலோ என நீளும் இப்பட்டியல் ரேணுகாதேவி, நம்நிதா , இராதாகிருஷ்ணன், சந்திரிகா கௌசிக் என்ற பெயர்களையும் உள்ளடக்கியுள்ளது. இந்தியாவின் வேகமாய் வளர்கிற பொருளாதாரம் தற்போதும் ஒற்றை இலக்க விகிதத்திலேயே உள்ளது. இரட்டை இலக்க வளர்ச்சியை சீனா போன்று எட்டுவதற்கு உள்ள முக்கியத் தடைகளில் ஒன்று பாலின இடைவெளியேயாகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.