கிடப்பில் போடப்பட்ட நகராட்சிப்பணிகளை விரைந்து முடிக்குமாறு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத மதுராந்தகம் நகராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதால் பல்வேறு மக்கள் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மதுராந்தகம் நடகராட்சியின் நிர்வாகப் பணிகளை கவனிக்க ஆணையர் நியமிக்கப்படாமல் இருப்பதால் தொடர்ந்து பணிகள் நடைபெறுவதில்லை.

இந்நிலையில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த வேண்டும், குடி தண்ணீர் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும், துப்புறவு பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும், நகர் பகுதியில் உடைந்துள்ள சிறு பாலங்களை உடனடியாக சீர்செய்ய வேண்டும், பழுதடைந்த குடிதண்ணீர் மின் மோட்டர்களை சரி செய்ய வேண்டும், நகர சுடுகாட்டில் முட்புதர்களை அழித்து மின் விளக்குகளை அமைக்க வேண்டும், கழிவு நீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும், காந்தி நகர் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை சுத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர கிளைகள் சார்பில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 4 மற்றும் டிசம்பர் மாதம் 26 ஆகிய தேதிகளில் நகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை பணிகள் நடைபெறவில்லை.

ஆணையர் இல்லாத காரணத்தால் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக நிர்வாகத்தின் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் மக்கள் பணிகளை தொடர்ந்து கிடப்பில் போடும் நிர்வாகத்தை கண்டித்தும், மெத்தனமாக செயல்படும் பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் வெள்ளியன்று (மார்ச் 9) காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுராந்தகம் நகர கிளையின் சார்பில் நகராட்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

போராட்டத்தின் போது மனுக்களை வாங்கிக்கொள்ள நகராட்சி ஆணையர் மற்றும் பொறுப்பு அதிகாரிகள் யாரும் அலுவலகத்தில் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அலுவலகத்திற்குள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் காவல் ஆய்வாளர் அந்தோனி ஸ்டாலின் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தொடர்ந்து மாலை ஐந்து மணியளவில் நகராட்சி ஆணையர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்த இருப்பதாக தெரிவித்தன் பேரில் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

நகர செயலாளர் எஸ்.துளசி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி. கிருஷ்ணராஜ், பி.மாசிலாமணி, வட்டச் செயலாளர் கே.வாசுதேவன், வட்டக் குழு உறுப்பினர்கள் வி.பொன்னுசாமி, ஆர்.நடராஜன், ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

Leave A Reply

%d bloggers like this: