காவிரி பிரச்சனைக்கு தீர்வு மத்திய அரசின் கையில் உள்ளது என்று முன்னாள் பிரதமர் தேவ கவுடா கூறியுள்ளார்.

பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக வெள்ளியன்று (மார்ச் 9) காஞ்சிபுரம் வந்த அவர் வரதராஜ பெருமாள் கோயிலில் அர்ச்சகராக இருக்கும் தனது நண்பர் ஒருவர் வீட்டுக்குச் சென்றார். இதனைத் தொடர்ந்து அங்கு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வரும் வேலையில் இந்தப் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு ஏற்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் இதுகுறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பது மத்திய அரசின் கையில்தான் உள்ளது என்றார்.

பெரியார், லெனின் சிலைகள் உடைக்கப்படுவது, மோசமான செயல் என்ற அவர், பாரதிய ஜனதா அரசு மற்றும் கட்சியின் மோசமான செயல்பாடுகளை இது காட்டுகிறது என்றும் பெரியார் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த மக்களுக்காகப் போராடிய தலைவர். அவர் சிலைக்கு அவமரியாதை செய்வதை ஏற்க முடியாது என்றும் கூறினார்.

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை என்று மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அவர், தாம் புதுதில்லியில் இருந்ததால் பங்கேற்க முடியவில்லை என்றார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் தேவகவுடா காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சென்றார். கோயிலுக்கு வந்த அவரை அலுவலர்கள், அர்ச்சகர்கள் வரவேற்றனர். பின்னர் சக்கரத்தாழ்வார் சந்நிதி அருகே நடைபெற்ற சுதர்சன ஹோமத்தில் குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.

Leave A Reply

%d bloggers like this: