திருவாரூர்:
கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குநர் (ஓஎச்டி) மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள உள்ளாட்சி தொழிலுக்கான குறைந்தபட்சக் கூலியை அமல்படுத்தக் கோரி மார்ச் 12 திங்கள்கிழமையன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற உள்ளதாக சிஐடியு- கிராம பஞ்சாயத்து இணைப்புக்குழு அறிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறவுள்ள மனுகொடுக்கும் போராட்டத்தில் ஊராட்சித் தொழிலாளர்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென சங்கத்தின் மாநிலத் தலைவர் ப.சண்முகம், மாநிலச் செயலாளர் நா.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
கிராம ஊராட்சிகளில் மக்களின் அடிப்படை தேவைகளான குடிதண்ணீர், சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளை நிறைவேற்றும் ஊராட்சி தொழிலாளர்களாக மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குநர்கள் மற்றும் துப்புரவுப்பணியாளர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். தொடர் போராட்டங்கள் காரணமாக பல்வேறு அறிவிப்புகள் செய்யப்பட்டு இருந்தாலும் அவைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்துவது இல்லை. உள்ளாட்சி தொழிலுக்கான குறைந்தபட்ச ஊதிய மறுநிர்ணயம் செய்ய வேண்டுமென கடந்த 2005 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

உள்ளாட்சித் தொழிலாளர்களின் கோரிக்கைகள் 40 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டதால் நீதிமன்றத்தை நாட வேண்டியிருந்தது. உயர்நீதிமன்ற தலையீட்டின் பேரில் மூன்று முறை குறைந்தபட்ச ஊதிய மறுநிர்ணய கமிட்டி அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அந்த கமிட்டி மட்டும் அறிவிக்கப்படவில்லை. பின்னர் தொடர் முயற்சியின் காரணமாக கடந்த 18.06.2014 அன்று கமிட்டி அமைக்கப்பட்டு அதில் உறுப்பினராக சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆர்.கணேசன் நியமிக்கப்பட்டார்.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை பரிந்துரையின் பேரில் அரசு வெளியிட்ட ஆணையின்படி குடிநீர் தொட்டி இயக்குநர்களுக்கு மாத ஊதியம் ரூ.11,236.16 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 1 மணிநேர ஊதியம் ரூ.54.02 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. துப்புரவுப் பணியாளர்க்கு மாத ஊதியம் ரூ. 9,236.16 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி இணைக்கப்பட்டதாகும்.
நீதிமன்றம், நிர்ணயக்கமிட்டி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை பரிந்துரைத்த குறைந்தபட்ச ஊதியத்தை கால தாமதம் செய்திடாமல் உடனடியாக வழங்கிட தமிழக அரசை வலியுறுத்தி மார்ச் 12 அன்று மாநில முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் விடுபடாமல் பங்கேற்க வேண்டும்.

இப்போராட்டத்திற்கு பின்பும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்திட கிராமப் பஞ்சாயத்து இணைப்புக்குழு (சிஐடியு) முடிவுசெய்துள்ளது. மக்களின் அத்தியாவசியத் தேவையான குடிநீர் வழங்குதல் மற்றும் துப்புரவு செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடக்கூடிய தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக இப்போராட்டங்களில் எழுச்சியுடன் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.