புதுதில்லி:
கேரளாவைச் சேர்ந்த ஹாதியா – ஷபின் ஜகான் திருமணம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

ஹாதியா தனது திருமணத்தைச், சட்டப்படி பதிவுசெய்து இருப்பதால், அவர் தொடர்ந்து தனது கணவருடன் தங்கி இருக்கலாம்; அவர்களுக்கு எந்தவிதமான தொந்தரவையும் மத்திய – மாநில விசாரணை அமைப்புகள் தரக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஹாதியா – ஜஹான் திருமணம் செல்லாது என்ற, கேரள உயர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பையும் அவர்கள் ரத்து செய்தனர்.கேரளத்தைச் சேர்ந்த அசோகன் என்பவரது மகள் அகிலா (24). இஸ்லாம் மதத்தை தழுவி, பெயரையும் ஹாதியா என மாற்றிக்கொண்ட இவர், கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஷபின் ஜஹான் என்பவரைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டார்.ஹாதியாவின் தந்தை அசோகனோ, இத்திருமணத்திற்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், “24 வயதுப்பெண் மனதளவில் உறுதியாக இருக்க வாய்ப்பில்லை எனவே அவரை எளிதாக ஏமாற்றலாம்” என்ற கருத்தின் அடிப்படையில், ஷபின் – ஹாதியா திருமணம் செல்லாது என்று 2017 மே 24-இல் தீர்ப்பு அளித்தது.

24 வயதாகும் ஹாதியா நீதி மன்றத்தில் இரண்டுமுறை நேரில் ஆஜராகி, சொந்த விருப்பத்தின் பேரிலேயே மதம்மாறி திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியும் திருமணம் முறையாக பதிவு செய்யப்பட்டு இருப்பதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்தும் அவற்றை உயர் நீதிமன்றம் ஒரேயடியாக நிராகரித்து விட்டது.

காணாமல் போனதாக தந்தை புகார் அளித் திருக்கும்போது, ஹாதியா திருமணம் செய்து கொள்ள முடியாது என்று புதிய காரணத்தையும் நீதிபதி, தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், ஷபின் ஜஹான், இப்பிரச்சனையை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றார். கடந்த ஆகஸ்ட் 10 மற்றும் 16 தேதிகளில் இவ்வழக்கை விசாரித்த- அப்போதைய தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வு, தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு உத்தரவிட்டது.கேரள காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி. கிரி, “ஷபின் – ஹாதியா வழக்கை ஏற்கெனவே என்ஐஏ-தான் விசாரித்து வருகிறது என்பதை நினைவுபடுத்தினார். ஷபின் ஜஹான் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், இந்திரா ஜெய்சிங் ஆகியோர், “என்ஐஏ விசாரணைகள் திடீர் திருப்புமுனைகளுக்கு பெயர் பெற்றவை என்பதால், அதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட பெண்ணை முதலில் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்” என்றனர்.
இதனிடையே, தங்களின் திருமணம் பற்றி தேசிய புலனாய்வு முகமை விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, செப்டம்பர் 20-ஆம் தேதி ஷபின் ஜஹான் புதிய மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

முன்பு தலைமை நீதிபதியாக இருந்த ஜே.எஸ். கேஹர் ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், அக்டோபர் 3-ஆம் தேதி புதிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, திடீர் திருப்பமாக, ஆகஸ்ட் 16-ஆம் தேதி ஜே.எஸ். ஹேகர் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவை கேள்விக்கு உட்படுத்திய தீபக் மிஸ்ரா, புதிய கோணத்தில் வழக்கை ஆராய்ந்தார்.

ஷபினுக்கும் – ஹாதியாவுக்கும் இடையே நடந்த மத இணைப்பு திருமணத்தைத் தடை செய்ய கேரள உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஹாதியாவை, அவரது தந்தை கடந்த பலமாதங்களாக தன் பிடியில் வைத்திருப்பது குற்றம் என்றும் கண்டித்தார். முடிவில், “சட்டப்பிரிவு 226-இன் படி நடந்த ஷபின் – ஹாதியா திருமணத்தை செல்லாது என்று உயர் நீதிமன்றம் அறிவிக்க முடியுமா; இத்திருமணத்திற்கு தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை அவசியமா? என்று இரண்டு கேள்விகளை எழுப்பி, அதுதொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது, “இதுவரையிலான கேரள காவல்துறையின் விசாரணையில், ஷபின் – ஹாதியா திருமணத்தில் பட்டியலிடப்பட்ட குற்றங்கள் எதுவும் நடந்ததாக தெரியவில்லை; எனவே தேசிய விசாரணை அமைப்பின் விசாரணை தேவையற்றது” என்று கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு தெரிவித்தது.

நவம்பர் 28-ஆம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஹாதியா நேதில் ஆஜராகி, தனக்கு சுதந்திரம் வேண்டும்; படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும்; எனக்கான படிப்புச் செலவை கணவர் ஷபின் பார்த்துக் கொள்வார் என்று குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து ஹாதியாவை உடனடியாக சேலம் மருத்துவக்கல்லூரியில் சேர்க்கவும், கல்லூரி முதல்வர் பாதுகாவலராக இருக்கவும், விடுதி வசதி அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும், ஹாதியா – ஷபின் திருமணத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறிய நீதிபதிகள், அதுபற்றி தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டியதில்லை என்றும் தெரிவித்தனர். மதமாற்றம் மற்றும் திருமணத்தில் பின்னணியில் சதி உள்ளதா? என்பதை மட்டுமே தேசிய புலனாய்வு முகமை விசாரிக்கலாம் என்றும் கூறினர்.

கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி இவ்வழக்கில் மீண்டும் விசாரணை நடைப்பெற்றது. அப்போது, சேலத்தில் தன்னை வந்து சந்திக்கும் பெற்றோர், மீண்டும் இந்து மதத்திற்கு மாறச்சொல்லி, கட்டாயப்படுத்துவதாக ஹாதியா நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார். தான் ஒரு இஸ்லாமியப் பெண்ணாக கணவருடன் சுதந்திரமாக வாழ விரும்புவதாகவும் தெரிவித்தார். பாஜக தலைவர்களின் கைப்பாவையாகவே, தனது தந்தை அசோகன் செயல்படுகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஹாதியா – ஷபின் வழக்கில் தங்களின் தீர்ப்பை வழங்கினர்.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், “ஹாதியா – ஜஹான் திருமணம் சட்டப்படி செல்லும்; இதை செல்லாது என்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்கிறோம்; ஹாதியா சட்டப்படி தனது திருமணத்தை பதிவு செய்து இருப்பதால், அவர் தொடர்ந்து தனது கணவருடன் தங்கி இருக்கலாம்; இவர்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் மாநில, மத்திய விசாரணை அமைப்புகள் அளிக்கக் கூடாது” என்று அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.அதேசமயம், “ஹாதியாவின் கணவர் ஜஹான் பின்புலம் குறித்து தேசிய புலனாய்வு விசாரணை அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு விசாரணை நடத்தத் தடையில்லை; ஆனால் அவர்களின் திருமணம் குறித்து எந்தவிதமான கேள்வியும் எழுப்பக்கூடாது” என்றும் நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.