திருச்சி:                                                                                                                                                                                     கர்ப்பிணி உஷா மரணத்துக்கு காரணமான துவாக்குடி போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் மீது கொலை செய்யும் நோக்கோடு விபத்து ஏற்படுத்துதல் உள்பட 2 பிரிவுகளின் கீழ் மட்டுமே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்துக்கு காரணமான ஆய்வாளர் காமராஜ், குடி போதையில் வாகன சோதனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இவர் சர்ச்சைகளில் சிக்குவது, அத்துமீறுவது புதிதல்ல என்கிறது திருச்சி காவல்துறை வட்டாரங்கள்.கடந்த 2002ம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் பணிபுரிந்த காமராஜ், அவசரத் தேவைக்காக விடுப்பு கேட்ட காவலரை அசிங்கமாக திட்டித் தீர்த்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த காவலர், தன்னுடைய துப்பாக்கியை எடுத்து காமராஜை நோக்கி சுட்டுள்ளார். அதில் அவர் தப்பி விட, வேறு ஒரு காவலர் மீது குண்டு பாய்ந்தது. அடுத்து அந்த காவலர் தன்னையே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த பிரச்னையில் நீண்ட காலம் பணி உயர்வு பெறாமல் இருந்த நிலையில், கடந்த சில ஆண்டுக்கு முன்பு பணி உயர்வு பெற்ற காமராஜ், திருச்சிக்கு வந்த சோதனையாக மாறுதலாகி வந்தார்.

காவல்துறை உயர் மட்டத்தில் கிரிமினல்கள் பதவியில் இருக்கிறார்கள். கீழ்மட்ட அதிகாரிகளில் ஒரு சதவீத கிரிமினல்கள் உள்ளனர். உயர்மட்டத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளில் 4- 5 சதவீத கிரிமினல்கள் உள்ளனர் என்று சமீபத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் தனது ஓய்வு பெறும் நாளில் இந்த அதிர்ச்சித் தகவலை குறிப்பிட்டார். இந்த கூற்றை நிரூபிக்கும் வகையில் தற்போது திருச்சி ஆய்வாளர் காமராஜின் நடத்தை காட்டியுள்ளது.

உயிர் பறிக்கும் ஹெல்மெட்
இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வாகன ஒட்டிகளுக்கு நெருக்கடியான பயணமாக மாறி விட்டது. ஹெல்மெட் கட்டாயத்தை தீவிரமாக அமல்படுத்தியதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர் மனிதாபிமானத்துடன் மற்றவர்களுக்கு உதவும் நோக்கத்துக்கு அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது. பள்ளி, கடைக்கு செல்லும் போதும் அணிய வேண்டுமா என ஹெல்மெட் அணிவதில் பல நடைமுறை சிக்கல்களை, எண்ணற்ற பிரச்சனைகளை தினசரி எதிர்கொள்வதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

டார்க்கெட்டா, வசூலா?
ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களைப் பிடிக்க வேண்டும் என காவல் நிலையங்களுக்கு டார்க்கெட் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுவது சாமானிய மக்கள் தான். அதனால் ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்கிறோம் என திடீரென நடுவழியில் நின்று கையில் உள்ள லத்தியை போடுவது, நீட்டி வாகனத்தை தடுத்து நிறுத்த முயல்வது என இதுபோன்ற அதிகரிக்கும் போலீசாரின் அடாவடி செயல்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இதில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. பரபரப்பு மிகுந்த காலை, மாலை வேளையில் சோதனை செய்கின்றனர். அபராதம் கட்ட பயந்து திடீர் என பிரேக் பிடித்து மாற்றுப் பாதையில் அல்லது வேகமாக சிலர் வாகனத்தை இயக்குகின்றனர். முக்கியமான சாலைகளில் நின்று கொண்டு வாகன சோதனை செய்வது போதாது சந்து, பொந்துகளில் நின்று கொண்டு போலீசார் தங்களது “கடமையை” செய்கின்றனர்.
சோதனைகளில் சிக்குபவர்களை ஆவணங்களை சோதித்த பின்னர் சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அபராதம் விதிக்காமல் அனுப்புவது என்பது நடைமுறையில் இல்லை. நூறு ரூபாயாவது அபராதம் கட்டி விட்டு செல் என்று நிர்பந்தப்படுத்துவது, மிரட்டுவது என வாடிக்கையாக உள்ளது. ஒழுங்காக ஹெல்மெட் அணிந்து முறையான ஆவணங்கள் வைத்திருந்தாலும் மரியாதைக் குறைவாக பேசுகிறார்கள்.

பெரியவர், முதியவர் என வயது பாராமல் ஒருமையில் பேசுவது, அவதூறான வார்த்தைகளால் திட்டுவது, என மிரட்டுவது அதிகளவில் நடப்பது வாடிக்கையாகி விட்டது. கிரிமினல் குற்றவாளிகளை போல் நடத்துகின்றனர். கீழ்மட்ட போலீசார் மட்டுமல்ல, ஆய்வாளர் அளவில் உள்ள உயர் அதிகாரிகளும் அநாகரீகமாக செயல்படுகின்றனர். இதற்கு சாட்சி, சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநர் தீக்குளித்து இறந்த சம்பவமும் ஒன்று.இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் உஷாவின் அநியாய மரணம் என்பதே தமிழக மக்களின் கேள்வி

Leave A Reply

%d bloggers like this: