திரிபுரா:
நாட்டிலேயே கல்வியறிவில் முதலிடம். தனிநபர் அளவிலான நிகர உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் முதலிடம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தின் கீழ், மக்களுக்கு வேலையளிப்பதில் முதலிடம். சுகாதாரத்துறை மேம்பாடு மூலம், ஆயிரம் ஆண்களுக்கு 960 பெண்கள் என்ற ஆண்-பெண் விகிதத்தையும், ஆயிரத்திற்கு 20 என்ற சிசு மரண விகிதத்தையும் கொண்ட மாநிலம். நாட்டிலேயே பெண் தொழிலாளர்களின் பங்களிப்பை அதிகரித்து வரும் மாநிலம். சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற்ற மாநிலம்.

தீவிரவாதத்தை, வளர்ச்சியின் மூலம் எதிர்கொண்டு, சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்திய மாநிலம். குறைவான சம்பளம் பெறும் எம்எல்ஏ-க்களைக் கொண்ட மாநிலம். ஊழல் குற்றச்சாட்டுக்கள் இல்லாத ஆட்சி நடக்கும் மாநிலம் என்று திரிபுரா மாநிலத்திற்கு நிறைய பெருமைகள் உண்டு. ஆனால், இவையெல்லாவற்றையும் விட, நாட்டிலேயே மிகவும் ஏழ்மையான- எளிமையான முதல்வரைக் கொண்ட மாநிலம் என்பதுதான் முதலாளித்துவ ஊடகங்களும் கொண்டாடிய திரிபுராவின் பெருமையாக இருந்தது.

2410 ரூபாய் வங்கி கையிருப்பு தவிர, சொந்தமாக காரோ பெரிய வீடோ இல்லாதவர்; வருமான வரி கட்டவேண்டிய தேவை ஏற்படாத அளவுக்கு வருமானம் இல்லாதவர், எம்எல்ஏ-வுக்கான ஊதியம் 9 ஆயிரத்து 700 ரூபாயை கட்சிக்கு கொடுத்துவிட்டு, கட்சி தரும் ரூ. 5 ஆயிரத்தில் வாழ்க்கை நடத்தி வந்தவர் என்று அவரைப் பற்றி பாராட்டாதவர்கள் இல்லை.
பதவி விலகிய உடனேயே, அரசு இல்லத்தை காலிசெய்து விட்டு அவர், கட்சி அலுவலகத்தில் குடியேறியபோது, அந்த பெருமையையும், பாராட்டையும் மாணிக் சர்க்கார் இன்னும் அதிகமாக ஒளிவீசச் செய்திருக்கிறார்.

ஆனால், பாஜக ஆட்சியைப் பிடித்ததன் மூலம், திரிபுராவின் ‘ஏழை முதல்வர்’ பெருமை தற்போது பறிபோயிருக்கிறது.பாஜக சார்பில் திரிபுராவின் புதிய முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ள பிப்லாப் குமார் தேப், மாணிக் சர்க்கார் போல எளிமையானவர் அல்ல. திரிபுரா மாநிலத்தில் உள்ள எம்எல்ஏ-க்களிலேயே பெரும்கோடீஸ்வரர் அவர்தான். பண்ணாமலிபூர் தொகுதியில் வெற்றிபெற்றுள்ள பிப்லாப் குமார் தேப்பிடம், 2 கோடியே 13 லட்சத்து 93 ஆயிரத்து 539 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கின்றன. இது அல்லாமல் அவரது மனைவியின் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் அளவிற்கு சொத்துக்கள் இருக்கின்றன. பிப்லாப் குமார் தேப்பின் ஆண்டு வருமானம் 2 லட்சத்து 99 ஆயிரத்து 290 ரூபாய். அவரது மனைவியின் ஆண்டு வருமானம் 9 லட்சத்து ஆயிரத்து 910 ரூபாய். இவர் தில்லி ஸ்டேட் பேங்க் வங்கி கிளையில் மேனேஜராக இருக்கிறார்.

பிப்லாப் குமாரிடம் கையிருப்பாக மட்டும் 90 ஆயிரத்து 500 இருக்கிறது. நான்கு வங்கிக் கணக்குகள் வைத்துள்ளார். அவற்றில் 61 லட்சத்து 93 ஆயிரத்து 37 ரூபாய் பணம் இருக்கிறது. ஷேர் மார்க்கெட்டில் 60 ஆயிரம் ரூபாய் பணம் வைத்திருக்கிறார். இன்சூரன்சில் 10 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்திருக்கிறார். அவரின் ஒரு இருசக்கர வாகனத்தின் விலை மட்டும் 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய். இவைதவிர 3 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு நகை இருக்கின்றன. 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு சிறு சொத்துக்கள், பொருட்களும் இருக்கின்றன.இவையெல்லாம் பிப்லாப் குமார் தேப், கணக்கில் “காட்டிய” சொத்துக்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.