சென்னை:
பெரியார் குறித்து விமர்சனம் செய்த எச்.ராஜாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிமுக தலைமைக் கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், பெரியார் குறித்து எச்.ராஜா தொடர்ந்து விமர்சனம் செய்து வருவது குறித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில், ‘‘பெரியார் குறித்து டுவிட்டரில் பதிவு செய்யப்பட்ட கருத்து அவருக்கு தெரியாமல் நடந்திருந்தாலும் அது கண்டனத்துக்குரியதுதான். தந்தை பெரியார் ஒரு பொக்கிஷம். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராட்டம் நடத்தி அதில் வெற்றி கண்டவர். தலைவர்களின் சிலையை சேதப்படுத்துவோர் மீது அரசு கடும் நடவடிகை எடுக்கப்படும்’’ என்றார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிக்கையில், ‘‘எச்.ராஜா பேசுவது மிகவும் கண்டனத்துக்குரியது. டுவிட்டரில் தனது உதவியாளர் பதிவு செய்துவிட்டதாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அனைவரது மனமும் புண்பட்டுள்ளது. எனவே எச்.ராஜா பொது மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார்.

அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கண்டனம்
எச்.ராஜா தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருவதால், அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ், மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.‘‘பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சமீபகாலமாக சட்டம்- ஒழுங்கை கெடுக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசி வருவதை தமிழ்நாட்டு மக்கள் சிறிதும் விரும்பவில்லை. திரிபுராவில் லெனின் சிலை தகர்க்கப்பட்டதை வரவேற்று, அதே போல் தமிழகத்தில் பெரியார் சிலையையும் தகர்ப்போம் என கருத்து கூறியிருப்பது தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது. லெனின் ஏழைகளின் குரலாக உலகமெங்கும் ஒலிப்பவர். தந்தை பெரியார் சமூக நீதியின் குரலாக ஒலிப்பவர். இதை எச்.ராஜா போன்றவர்கள் உணர வேண்டும்’’ என்றும் அறிக்கை ஒன்றில் கூட்டாக தெரிவித்திருக்கிறார்கள்.

எச்.ராஜா சிறைக்குப்போவது நிச்சயம்: ஜெயக்குமார்
இதனிடையே, மலிவான விளம்பரத்துக்காக பேசிவரும் எச்.ராஜா சிறைக்கு செல்வது நிச்சயம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,‘‘ தமிழை அவமதித்து, தமிழை கேவலப்படுத்துகிற எந்த செயலையும் எந்த நிலையிலும் அரசு ஏற்றுக் கொள்ளாது. எச். ராஜா மட்டுமல்ல அது யாராக இருந்தாலும் சிறையில் தள்ளப்பட வேண்டியவர்கள்தான்.தவறான தகவல் கொடுத்து மக்களை திசை மாற்றி, அதன் மூலம் தமிழ்நாட்டில் ஒரு வன்முறைக் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்; அவர் சிறைக்கு போவது நிச்சயம். கண்டிப்பாக சிறையில் அடைப்போம்’’ என்றார்.

Leave A Reply

%d bloggers like this: