சென்னை:
உஷா மரணத்திற்கு காரணமான காவல்துறை ஆய்வாளர் மீது இரட்டைக் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுமக்களை விடுதலை செய்யுமாறும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம், பாபநாசத்திற்கு அருகில் உள்ள சூலமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜாவும் அவரது மனைவி உஷாவும் புதன் இரவு தஞ்சாவூரிலிருந்து திருச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது துவாக்குடி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் காமராஜ், ராஜா – உஷா தம்பதியினரை ஆறு கிலோ மீட்டர் விரட்டிச்சென்றுள்ளார். கணேசபுரம் சுங்கச்சாவடி அருகில் சென்று கொண்டிருக்கும்போது, போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததில் ராஜாவின் மனைவி உஷா கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார். ராஜா காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக குழந்தையின்மைக்கு சிகிச்சை எடுத்து வந்த உஷா மூன்று மாதங்களுக்கு முன்புதான் மகப்பேறு தரித்திருந்ததாக தெரிகிறது. நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்லும்போது இந்த கொடுமை நேர்ந்துள்ளது. உஷாவை இழந்து வாடும் அவரது கணவருக்கும் அவரது உறவினர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. 

இச்சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் பதற்றமடைந்து சம்பந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளர் காமராஜை கைது செய்து, கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டுமென மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர். அமைதியான முறையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தடியடி தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர். இந்த தாக்குதலில் பலரது மண்டை உடைந்துள்ளது; பலர் படுகாயமுற்றுள்ளனர்; 23 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காவல்துறையினரின் இந்த வன்முறை வெறியாட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.கர்ப்பிணிப் பெண் உஷா மரணத்திற்கு காரணமான, கைது செய்யப்பட்டுள்ள காவல்துறை ஆய்வாளர் மீது இரட்டைக் கொலை வழக்கு பதிவு செய்து உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும், அமைதியாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது தடியடித் தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், நியாயம் கேட்டுப் போராடியதற்காக கைது செய்யப்பட்ட பொதுமக்கள் அனைவரையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டுமெனவும், உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Leave A Reply

%d bloggers like this: