சென்னை:
தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வரும் பாஜக தலைவர் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
திரிபுராவில் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல்கள், லெனின் சிலை தகர்ப்பு, சிபிஎம் அலுவலகங்களுக்கு தீ வைப்பு, இடதுசாரி ஊழியர்கள் மீது கொலை வெறிதாக்குதல் என வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன.இதன் தொடர்ச்சியாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, திரிபுராவைப்போன்று தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகளையும் உடைப்போம் என்றார். வேலூரில் பெரியார் சிலையும் உடைக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறை வெறியாட்டங்களுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இதன் ஒருபகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழனன்று (மார்ச் 6) சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, சிபிஐ (எம்எல்) லிபரேசன் எஸ்யுசிஐ (கம்யூனிஸ்ட்) ஆகிய அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் பெருந்திரளாக பங்கேற்றனர்.

எச்.ராஜாவின் பாதுகாப்பு                                                                                                                                                       இப்போராட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:தமிழக ஆட்சியாளர்களின், அனுசரணையான போக்கால், பாஜக தலைவர் எச்.ராஜா தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் வகையில் இழிவாகப் பேசி வருகிறார். இதனால் மக்கள் கொந்தளித்து உள்ளனர். வருத்தப்படும் படியான சம்பவங்கள் நிகழ்ந்தால் அதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டி வரும். எனவே, ராஜாவின் பாதுகாப்பைக் கருதி, அவரை தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். எச்.ராஜா சிறைக்கு செல்வார் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியிருக்கிறார். அது பேச்சாக இல்லாமல் செயலாக இருக்க வேண்டும்.25 வருடகால ஆட்சியில் பிரிவினைவாத, தீவிரவாத சக்திகளை தனிமைப்படுத்தி திரிபுராவை அமைதிப் பூங்காவாக இடதுசாரிகள் மாற்றினர். தேர்தலை மட்டுமே குறியாக கொண்ட பாஜக, பிரிவினைவாத, தீவிரவாத சக்திகளுடன் கூட்டணி வைத்து ஆட்சிக்கு வந்துள்ளது. தேர்தல் மட்டுமே நோக்கமாக இருந்தால் பாஜக-வை இடதுசாரிகள் முகவரி இல்லாமல் செய்திருப்பார்கள். எம்எல்ஏ-க்களை வாங்குவது, கட்சியை மாற்றுவது, ஆட்களைக் கடத்துவது, சர்வதேச ரீதியான தில்லுமுல்லு அரசியல் போன்றவற்றின் ஒட்டுமொத்த குத்தகைதாரர் மோடி. அந்தக்கட்சியின் தலைவர் அமித்ஷா, இந்தியாவில் இனிமேல் எதிரிகளே இல்லை என கொக்கரிக்கிறார். அதை 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பார்ப்போம்.

லெனினும் இந்தியாவும்
கம்யூனிசத்தையும், மார்க்சியத்தையும் எதிர்த்தவர்கள்தான். வரலாற்றில் காணாமல் போயுள்ளனர். ஆடிக்காற்றில் அம்மியே பறக்கிறபோது மோடி எம்மாத்திரம்? கம்யூனிஸ்ட்டுகளுக்கு விடுதலைப்போராட்டத்தின் வீர வரலாறு உள்ளது. பாஜகவிற்கோ துரோக வரலாறுதான் உள்ளது. லெனின் இல்லையேல் புரட்சி நடத்திருக்காது. சோவியத் ரஷ்யா இல்லையென்றால் இந்தியாவிற்கு விடுதலை கிடைத்திருக்காது. விடுதலை அடைந்த இந்தியாவின் பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்க 50 ஆண்டுகள் தொடர்ந்து பல லட்சம் கோடிகளை சோவியத் ரஷ்யா வழங்கியது. என்எல்சி-யை வழங்கியதும் ரஷ்யாதான்.
பெரியாரைப் பற்றி பேச எச்.ராஜா பரம்பரைக்கே அருகதை இல்லை. அம்பேத்கர் கொண்டு வந்த அரசியலமைப்புச்சட்டத்தில் திருத்தி இடஒதுக்கீட்டை பெற்றுத்தந்தவர் பெரியார். சாதியப்படிநிலைகளில் சிறிதளவு தகர்க்கப்பட்டுள்ளதெனில் அதில் பெரியாருக்கும் பங்கு உள்ளது. கோவிலுக்குள் சென்று பிள்ளையார் சிலையை உடைத்து மத நம்பிக்கையாளர்களை பெரியார் புண்படுத்தவில்லை. சொந்தக் காசில் வாங்கி எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் உடைத்தார்.ஆனால் பாஜக எதிர்ப்பு என்பது வேறு. வெறிபிடித்தவர் போல எச்.ராஜா பேசி வருகிறார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் பேசும் அனைவரும் ஒன்றுதிரண்டு நிற்கிறோம். லெனின், பெரியார், அம்பேத்கர் படங்களை தெருத்தெருவாக கொண்டு சென்று புரட்சிகர பகுத்தறிவு, சிந்தனையை வளர்தெடுப்போம். ராஜாவின் வீட்டிற்கே சென்று இம்மூவரின் படத்தையும் நிறுவுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திக துணைப்பொதுச் செயலாளர் கலிபூங்குன்றன் மற்றும் சுசீலா (சிபிஐ), அனீபா (மமக), எம்.சந்திரன் (எஸ்யுசிஐ-சி), சேகர் (சிபிஐ(எம்எல்)எல் ஆகியோர் பேசினர். சிபிஎம் மாநிலச்செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், மாநிலக்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், கே.ஆறுமுகநயினார் உள்ளிட்டு நூற்றுக்கணக்கானனோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் நிறைவில் எச்.ராஜாவின் உருவபொம்மை எரிப்பைத் தடுக்க போலீசார் பாய்ந்து வந்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன்பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்று கொண்டிருந்தனர். இதனிடையே போலீசார் சிலரை குறிவைத்து கைது செய்ய முயற்சித்தனர். இதனால் மீண்டும் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பெண்களையும், வயதானவர்களையும் இழுத்துச் சென்று கைது செய்தனர். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டு 35 பேர் மீது ஐபிசி 186வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.