திருச்சி: வாகன சோதனையின் போது காவல் ஆய்வாளர் ஒருவர் உதைத்ததில் கர்ப்பிணி பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.

திருச்சி அய்யம்பேட்டை அடுத்த சூழப்பேட்டை எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி உஷா. இதில் உஷா மூன்று மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் திருச்சி  – திருவெறும்பூர்  கணேஷா  ரவுண்டானா  பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஹெல்மெட் அணியாத காரணத்திற்காக காவல்துறையினர் இவர்களது வாகனத்தை நிறுத்த முற்பட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து இவர்களை பின் தொடர்ந்து சென்ற காவல் ஆய்வாளர் காமராஜ் என்பவர் இவர்களின் இருசக்கர வாகனத்தை காலால் எட்டி உதைத்துள்ளார். இதில் நிலைதடுமாறி கணவன் மனைவி இருவரும் சாலையில் விழுந்தனர். அப்போது பின்னால் வந்த ஆம்னி வேன் உஷா மீது மோதியது. இந்த சம்பவத்தில் உஷா உயிரிழந்தார். பின்னர் படுகாயமடைந்த ராஜா அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதிமக்கள் மற்றும் மாணவர்கள் 2 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3 மணி நேரத்திற்கு மேலாக நடந்து வந்த போராட்டத்தை தொடர்ந்து காவல்துறையினர் போராட்டக்கரார்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். இதில் பொது மக்கள் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

Leave A Reply