மேட்டுப்பாளையம், மார்ச் 7-
யானை – மனித மோதலை தவிர்க்க ஏற்படுத்தப்பட்டு களிறு திட்டம் தொடர்பாக அனைத்து அரசு துறையினர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு கூட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் மலையோர கிராமங்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வனத்தை விட்டு வெளியேறும் காட்டு யானைகள், மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் நுழைந்து அதிகளவில் சேதங்களை ஏற்படுத்தும் நிகழ்வுகள் அதிகரித்து வண்ணம் உள்ளது. எதிர் வரும் கோடை காலத்தில் வனங்களில் ஏற்படும் வறட்சி காரணமாக இப்பிரச்சனை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் காட்டு யானைகளின் ஊடுறுவல் அதிகம் உள்ளதாக 45 கிராமங்கள் கண்டறியபட்டுள்ளது. இதில் 19 கிராமங்கள் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கிராமங்கள் ஆகும். இதனை கருத்தில் கொண்டு இப்பகுதியில் தொடரும் யானை – மனித மோதல்கள் மற்றும் இதனால் ஏற்படும் பயிர் மற்றும் உயிர்சேதங்கள் தவிர்த்தல் குறித்து மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி கிராமத்தில் அனைத்து அரசு துறை சார்ந்த அதிகாரிகள், விவசாயிகள், வன உயிரின ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் வனவிலங்குகளின் ஊடுறுவலை தடுக்கும் விதம் குறித்தும் இவற்றால் ஏற்படும் சேதங்களுக்கு உரிய இழப்பீடு பெறுவது குறித்தும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கபட்டது. இப்பிரச்சனைகள் குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எழுப்பியசந்தேகங்களுக்கு துறை சார்ந்த அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதில் விவசாய விளை நிலங்களில் தேனீக்கள் வளர்ப்பது, யானை போன்ற விலங்குகளுக்கு பிடித்தம் இல்லாத பயிர்களை நடவு செய்வது போன்றவை இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவும் என்ற கருத்துக்கள் இக்கூட்டத்தில் தெரிவிக்கபட்டது. மேலும், விவசாயத்தை தவிர்த்து வனம் மற்றும் வனஉயிரினங்களை பாதுகாப்பது சரியானது அல்ல. வேளாண்மையை சார்ந்தே இயற்கை வளமும் வன உயிரினங்களும் பாதுக்காக்கப்பட வேண்டும் என்பதே மனித – யானை மோதலை தவிர்க்க கொண்டு வரபட்ட களிறு திட்டத்தின் நோக்கமாகும் என வனத்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தினர். அதேநேரம், யானைகளால் ஏற்படும் இழப்புகளுக்காக வழங்கப்படும் இழப்பீட்டு தொகையினை உயர்த்தி தரவேண்டும். அதில் ஏற்படும் கால தாமதங்களை தவிர்க்க வேண்டும் என்று கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

இதேபோல், எந்த காரணம் கொண்டும் தோட்டங்களை சுற்றியுள்ள கம்பி வேலிகளில் சட்ட விரோதமாக உயர் அழுத்த மின்சாரத்தை பாய்ச்சக்கூடாது. இது விலங்குகளை மட்டுமல்ல மனிதர்களையும் கொன்று விடும் என்பதால் சோலார் மின்வேலிகள் அமைப்பதே சிறந்தது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, மேட்டுப்பாளையம் வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் வனச்சரக அலுவலர் செல்வராஜ், வருவாய்த்துறை சார்பில் வட்டாட்சியர் ரங்கராஜ், சுகாதாரத்துறை சார்பில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சேரலாதன் மற்றும் வேளாண்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, மின்சாரத்துறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.