கணினியிலும் கைபேசியிலும் தமிழைப் பயன்படுத்த உதவும் மென்பொருள்கள் பலஇன்று வந்துவிட்டன. பல ஆண்டுகளாக நீடித்து வந்த எழுத்துரு பிரச்சனைகளும் ஓரளவு தீர்ந்து ஒருங்குறி (Unicode) வடிவமே பொதுவானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட வகை எழுத்துரு குறிமுறைகள் (Font Encoding) தமிழைஅடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதை தாமதப்படுத்தி வந்தன. ஒருங்குறி ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகே புதிய மென்பொருள்களை உருவாக்குவது எளிதாகியது.இணையம் பரவலாக பயன்படுத்தப்படும் இன்றைய சூழலில் கணினி மற்றும் கைபேசிகளில் உள்ளூர் மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் உலக அளவில்தமிழுக்கான வாய்ப்பும், தேவையும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடந்த 21ஆம் தேதி தாய்மொழி தினத்தன்று மைக்ரோசாப்ட் நிறுவனம் முக்கியமான அறிவிப்பொன்றை வெளியிட்டது. அதில் நாம் வழக்கமாக ஆங்கிலத்தில் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரிகளை மைக்ரோசாப்ட் ஆபிஸ் 365, அவுட்லுக், எக்ஸ்சேன்ஜ் ஆகிய செயலிகளில் தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளில் பயன்படுத்தலாம். அதாவது, asiriyar@theekkathir.in என்ற முகவரியை ஆசிரியர்@தீக்கதிர்.இன் என்று குறிப்பிட்டாலும் சரியான முகவரிக்கு மின்னஞ்சல் சென்று சேரும். இதற்கு முன்பேதமிழில் இணைய முகவரி அமைக்கும் வசதியை சில நிறுவனங்கள் வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

தமிழை தட்டச்சு செய்வதற்கு விசைப்பலகை மென்பொருள்கள் போதுமான அளவு வந்துவிட்டன. எ-கலப்பை (http://thamizha.org/projects.html),என்எச்எம் ரைட்டர் (http://software.nhm.in/products/writer), அழகி (http://www.azhagi.com), குறள் தமிழ் செயலி (http://www.kuralsoft.com/kural-tamil-software.html), இனிய தமிழ் (http://iniyatamil.com/)ஆகிய கணினிச் செயலிகள் அதிகம் பயன்பாட்டில் உள்ளன. இவற்றுடன் தமிழக அரசின் தமிழ் இணையப் பல்கலைக் கழக இணையதளத்தில் கிடைக்கும் தமிழ் கீபோர்ட் இன்டர்பேஸ் (http://www.tamilvu.org/ta/coresite-html-cwdownld-342470) மென்பொருளும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மேற்கண்ட இலவச மென்பொருள்கள் மட்டுமின்றி வணிக நோக்கிலான கம்பன்(http://www.kamban.com.au),மென்தமிழ் போன்ற மென்பொருள்களும் கிடைக்கின்றன.

கைப்பேசிகளில் தமிழைத் தட்டச்சு செய்வதற்கும் செயலிகள் பல கிடைக்கின்றன. குறிப்பாகச் செல்லினம் (Sellinam), எழுத்தாணி (Ezhuthani), சுவிப்ட்கீ(SwiftKey Keyboard), கூகுள் இண்டிக்கீபோர்டு போன்ற செயலிகளைக் குறிப்பிடலாம்.

மேற்கண்ட தட்டச்சு வழியாக உள்ளிடும் கருவிகள் மட்டுமல்லாது மொழி மாற்றிகள் (Translation), குரல்வழி தட்டச்சு மற்றும் தட்டச்சு செய்யப்பட்ட எழுத்துக்களைக் குரல் ஒலியாக மாற்றுதல் (Speech to Text andText to Speech), ஒளியுரு எழுத்துணரி(optical character recognition – OCR),பிழை திருத்தம்செய்தல் ஆகியவற்றிற்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அந்த வகையில் இத்தகைய வகை மென்பொருள்கள்விண்டோஸ், ஆண்ட்ராய்ட் மற்றும் ஆன்லைன் பயன்பாட்டிற்கு கிடைக்கத் தொடங்கியுள்ளன.

ஜிபோர்ட் (GBoard)

வழக்கமான தட்டச்சு மென்பொருளுடன் திரையின்மீது தமிழில் எழுதுவதை உணர்ந்து எழுத்தாக மாற்றித் தரும் கூகுள் கையெழுத்து உள்ளீடு (Google Handwriting Input) வசதியைத் தந்த கூகுள் சமீபத்தில் தந்த மற்றொரு வசதி நாம் தமிழில் பேசுவதைக் கேட்டுத் தட்டச்சு செய்யும் ஜிபோர்ட்(GBoard) செயலி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தச் செயல்பாடுஇதற்கு முன்பாகவே கூகுள் டாக்ஸ் ஆன்லைன் பயன்பாட்டில் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். பிரபல தமிழ் தட்டச்சு மென்பொருளான அழகி தனது ஸ்மார்ட்போன் செயலியில் வழக்கமான தட்டச்சு கீபோர்டுடன் கூகுளின் மேற்கண்ட குரல்வழித் தட்டச்சு முறையையும் இணைத்து அழகி இன்டிக்கீபோர்ட் (Azhagi Indic Keyboard) செயலியில் வழங்கியுள்ளது.

மொழி மாற்றிகள் (Translator)

100க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கும் வசதியை வழங்கி வரும் கூகுள் தமிழ் மொழி பெயர்ப்பு வசதியை ஏழு ஆண்டுகளுக்கும் முன்பே வழங்கிவிட்டது. மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பிங் தேடு தளத்துடன் 50க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கும் வசதியைப் பல ஆண்டுகளாக வழங்கி வந்தாலும், அதில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் சமீபத்தில்தான் இணைக்கப்பட்டன. பிங் டிரான்ஸ் லேஷன் வசதியைப் பெற https://www.bing.com/translator என்ற இணைய முகவரியில் நுழையவும். கூகுளின் மொழிபெயர்ப்பு வசதி நம்மைப் போன்ற பயனர்களால் மேம்படுத்தப்படுவதால் தானியங்கி முறையில் சரியான திருத்தப்பட்ட சொற்றொடர்கள் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டு விடுகின்றன. இந்தத் திட்டத்தில் நீங்களும் இணைந்து உங்கள் பங்களிப்பை அளிக்க https://translate.google.com/community#en/ta என்ற இணையதளத்தில் நுழையவும்.

எழுத்து – ஒலி மாற்றி (Text to Speech)

தட்டச்சு செய்யப்பட்ட வாக்கியத்தை அல்லது புத்தகத்தைப் படிக்க ஒரு சில மென்பொருள்களும், கைபேசிசெயலிகளும் இருந்தாலும் எவையும் முழுமையான தரத்தை எட்டவில்லை. கூகுள் நிறுவனத்தின் டெக்ஸ்ட் டூ ஸ்பீச் செயலியும், மைக்ரோசாப்ட் தளமும்ஓரளவு இந்த வசதியை மேம்படுத்தியுள்ளன. மைக்ரோசாப்ட்டின் இந்த வசதியை முழுமையாகப் பயன்படுத்தக் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஒலியை எழுத்தாக மாற்றுதல் (Speech To Text)

குரல் வழிக் கட்டளைகளைத் தட்டச்சு செய்ய உதவும் கூகுள் நிறுவனத்தின் ஜிபோர்ட் (GBoard), செயலியில் தமிழ்சேர்க்கப்பட்ட பிறகு தமிழ் ஆர்வலர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வசதியைச் செயல்படுத்த ஜிபோர்ட் செயலியைப் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவவும். அடுத்து போனின் செட்டிங்ஸ் சென்று அதில் Language & Inputஎன்பதைத் தேர்வு செய்யவும். Keyboard & Input Methods என்ற பகுதியில் GBoard என்பதைத் தேர்வு செய்து நுழையவும். அதில் Voice input என்பதைத் தேர்வு செய்து மொழிகள் பிரிவில் தமிழ் (இந்தியா) என்பதைத் தேர்வு செய்யவும். இனி குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் தட்டச்சு செய்வதற்கு பதிலாக மைக் பட்டனை அழுத்திப் பேசினால் போதும். உங்கள் குரலை எழுத்தாகத் தட்டச்சு செய்து தரும்.

ஒளியுரு எழுத்துணரி (OCR)

நீண்டகாலமாகப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தத் தொழில்நுட்பம் முழுமையடையும் நிலையை எட்டிவிட்டது என்றே கூறலாம்.

இதிலும் கூகுள்தான் முந்தி நிற்கிறது. கூகுள் டாக்ஸ் அலுவலக ஆன்லைன் மென்பொருள் பயன்பாட்டில் சத்தம்இல்லாமல் இந்த வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்துவது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்று உள்ளது. எப்படியென்றால் நீங்கள் எழுத்தாக மாற்ற விரும்பும் ஆவணத்தை ஸ்கேன் செய்து PDF, JPEG, PNG போன்ற ஏதேனும் ஒரு இமேஜ் கோப்பாக முதலில் கூகுள் டிரைவில் சேமிக்க வேண்டும். பிறகு அந்த ஆவணத்தைத் தேர்வு செய்து ரைட் கிளிக் செய்தால் வரும் பட்டியலில் ஓப்பன் வித் என்பதில் கூகுள் டாக்ஸ் தேர்வு செய்ய வேண்டும்.இப்போது திறக்கும் கூகுள் டாக்ஸ் பக்கத்தில் ஸ்கேன் செய்யப்பட்ட கோப்பும் அதற்குக் கீழே அதில் உள்ள எழுத்துக்களும் காட்டப்படும். தற்போது தெளிவான, தட்டச்சு செய்யப்பட்ட எழுத்துக்களை மட்டுமே இந்த வகையில் மாற்ற முடிகிறது. இதே போன்ற வசதியைக் கைபேசிகளில் ஸ்மார்ட் லென்ஸ் (Smart Lens) என்ற செயலி எளிமையாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

கூகுள் நிறுவனம் தன்னுடைய டிரான்ஸ்லேட் (Google Translate) செயலியில் மொழி தெரியாத ஊரில் பெயர்ப்பலகைகளைப் படிக்க இச்செயலியிலிருந்து கேமராவை இயக்கி அந்தப் பெயரை படம் எடுத்தால் நாம் விரும்பும் மொழியில் அந்தப் பெயரை அதன் பொருளை அறிந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. OCR மற்றும் மொழி பெயர்ப்பு வசதிகளை இணைத்து வழங்கப்படும் இச்சேவையில் சோதனை முறையில் தமிழ் மொழி இணைக்கப்பட்டுள்ளது.

பிழை திருத்தி (Spell Checker)

இலக்கண, இலக்கிய வளம்மிக்க தமிழ் மொழிக்குச் சரியான சொற்பிழை மற்றும் சந்திப் பிழை திருத்திகள் உருவாக்குவது சவாலான ஒன்றாகவே இருந்து வருகிறது. அந்த வகையில்மென்தமிழ் என்ற கட்டண மென்பொருள் சிறப்பான செயற்பாட்டை வழங்கி வருகிறது. ஆன்லைனில் நீச்சல்காரன் என்ற இணையதளம் சொற்பிழை மற்றும் சந்திப் பிழைதிருத்தம் வசதிகளைத் தருகிறது. இது முழுமையானதாக இல்லாவிட்டாலும் பாராட்டத் தக்க முயற்சியாகும்.

வாணி (http://vaani.neechalkaran.com/) என்ற பிழை திருத்தம் பார்க்கும் வசதியில் தட்டச்சு செய்த கட்டுரையைக் காப்பி செய்து இத்தளத்தில் உள்ள பெட்டியில் பேஸ்ட் செய்து பிழை திருத்தம் சரிபார்க்கலாம். அதுபோலவே நாவி சந்திப் பிழை திருத்தி (http://dev.neechalkaran.com/p/naavi. html) வசதி மூலம் சந்திப் பிழைகளைச் சரிபார்க்கலாம். இத்தளத்தைப் போன்றே ஓம் தமிழ் திருத்தி (http://tirutti.omtamil.com/)என்ற மென்பொருள் ஆன்லைனிலும், ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் செயலியாகவும் கிடைக்கிறது.

இத்தளத்திலேயே சுளகு (http://dev.neechalkaran.com/p/sulaku.html) என்ற மென்பொருளில் தமிழ் வரிகளை அகர வரிசைப்படுத்தும் வசதி, எழுத்து மற்றும் வார்த்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும் வசதி ஆகியவை தரப்பட்டுள்ளன. TAM, TAB, TSCII,யுனிக்கோட் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட எழுத்துருக்களை ஒன்றிலிருந்து மற்றொரு வகைக்கு மாற்றித் தரும் வசதியும் ஓவன் என்ற பெயரில் (http://dev.neechalkaran.com/p/oovan.html) வழங்கப்பட்டுள்ளது.

இதே போன்ற வசதியை ஏற்கனவே சுரதா டாட் காம் என்ற இணையதளம் பொங்குதமிழ் (http://www.suratha.com/reader.htm) என்ற பெயரில் யுனிக்கோட் எழுத்துருவிற்கு மாற்றும் வசதியை மட்டும் வழங்கி வருகிறது. புகழ்பெற்ற NHM ரைட்டருடன் அதே தளத்தில் NHM கன்வெர்ட்டர் (http://software.nhm.in/products/converter) என்ற மென்பொருள் 9 வகை எழுத்துருக்களை மாற்றும் வசதியை ஆன்லைன் மற்றும் கணினியில் பதிவிறக்கி பயன்படுத்தும் மென்பொருளாகவும் தருகிறது. இனிய தமிழ் தட்டச்சு மென்பொருளுடன் மாற்றி என்ற பெயரில் TAM, TAB, TSCII,யுனிக்கோ ட், TACE 16, Indoword, செந்தமிழ் உள்ளிட்ட 10 எழுத்துருக்களை ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாற்றுவதற்கான வசதியையும் இணைத்து வழங்குகிறது.

எம்.கண்ணன், என்.ராஜேந்திரன்

Leave a Reply

You must be logged in to post a comment.