சேலம், மார்ச் 7-
சேலத்தில் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், வீராணம் அருகே உள்ள அதிகாரிப்பட்டி அம்பேத்கர் காலனியை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் தேவா (9) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிவநாதன் என்பவரின் மகன் சச்சின் (12) ஆகிய இருவரும் அதிகாரிப்பட்டி மெயின் சாலையில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். தற்போது பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருவதால் மற்ற மாணவர்களுக்கு காலையில் வகுப்புகள் கிடையாது. இதனால் செவ்வாயன்று காலையில் தேவா, சச்சின் உள்பட 5 பேர் அம்பேத்கர் காலனி அருகே உள்ளஅல்லிக்குட்டை ஏரிக்கு சென்று மீன் பிடித்ததாக கூறப்படுகிறது.அப்போது தேவா, சச்சின் ஆகியோர் ஏரியில் ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில், நீச்சல் தெரியாததால் இருவரும் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தனர். இதைப்பார்த்து சக நண்பர்கள் கூச்சலிட்டனர். அவர்களுடைய சத்தத்தை கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் மாணவர்கள் மீட்க முயன்றும் முடியாத நிலையில் இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வீராணம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மாணவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: