கோவை, மார்ச் 7-
தமிழகத்தில் வன்முறையை தூண்டும் எச்.ராஜாவை கைது செய், ஆர்எஸ்எஸ், பாஜக கும்பலின் பாசிச நடவடிக்கையை வேரறுப்போம் என்கிற முழக்கத்தோடு இடதுசாரி மற்றும் முற்போக்கு அமைப்பினர் பல்வேறு இடங்களில் ஆவேச ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் குண்டர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தி வருகின்றனர். மேலும், உழைக்கும் வர்க்கத்தின் ஆதர்ச நாயகனான புரட்சியாளன் லெனின் சிலைகளை இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இச்சம்பவத்தை கண்டித்து இடதுசாரிகள், முற்போக்கு அமைப்பினர் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதன்ஒருபகுதியாக மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோவை சிவானந்த காலனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.கருமலையான், சி.பத்மநாபன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.பாலா, மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா, சிபிஐ மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், ஆர்.தேவராஜ், சிவசாமி, மதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், ஆடிட்டர் அர்ஜூன்ராஜ், ஆர்எஸ்பி சார்பில்பாஸ்கர் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று ஆர்எஸ்எஸ், பாஜக பாசிச கும்பலை வேரறுப்போம் என ஆவேசமாக முழங்கினர்.

அனைத்து கட்சியினர் ஆவேசம்:
இதேபோல், வன்முறையை தூண்டி வரும் எச்.ராஜாவை குண்டர் சட்டம் அல்லது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி கோவை ஆத்துப்பாலம், சுந்தராபுரம், காந்திபூங்கா உள்ளிட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் திமுக, சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், திராவிடர் கழகம், எஸ்டிபிஐ. மகஇக உள்ளிட்ட அனைத்து கட்சி மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாவட்ட செயலாளர் சித்தார்த்தன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

வழக்கறிஞர்கள் கண்டனம்:
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெண்மணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜாவின் உருவ படத்தை எரித்தும், அவருக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர். இதில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சுந்தரமூர்த்தி, திமுக மயில்வாகணன், கணேஷ்குமார், காங்கிரஸ் வெள்ளியங்கிரி, மதிமுக சிவஞானம், விசி இளங்கோவன், தபெதிக ஜீவா, பியூசிஎல் பாலமுருகன், சமூகநீதி கட்சி பன்னீர்செல்வம் உட்பட அனைத்து கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

திருப்பூர்:
பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜாவைக் கண்டித்து பெரியார் இயக்கக் கூட்டமைப்பு சார்பில் திருப்பூர் ரயில்நிலையம் அருகேயுள்ள பெரியார் – அண்ணா சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.இதேபோல் எச்.ராஜாவை கைது செய்யக்கோரி, திராவிட இயக்க தமிழர் பேரவையினர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனர். எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி, தாராபுரம் அண்ணாசிலை முன்பாக விடுதலைசிறுத்தைகள் கட்சி சார்பிலும், அவிநாசியில் தலித் விடுதலைக் கட்சியினர் சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.தாராபுரத்தை அடுத்த மூலனூரில் திரிபுராவில் பாஜகவினர் நடத்தி வரும் வன்முறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கிளை செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்:
நாமக்கல் பூங்கா சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஐ மாவட்ட செயலாளர் எஸ்.மணிவேல் துவக்க உரையாற்றினார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி, காங்கிரஸ் கட்சியின் சித்திக். சிபிஐ (எம்எல்) கோவிந்தராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மணிமாறன், திராவிட கழகத்தின் வை.பெரியசாமி, மனிதநேய மக்கள் கட்சியின் சபீத், கணசக்தி முத்துசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அசோகன், வேலுசாமி, தங்கமணி, ஜெயமணி, சுரேஷ், கண்ணன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

நீலகிரி:
நீலகிரி மாவட்டம், உதகை மத்திய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், உதகை தாலுகா செயலாளர் சங்கரலிங்கம், டி.பி.ராஜேஸ்வரி, கே.ராஜன், திமுக மாவட்ட நிர்வாகி முஸ்தபா, ராஜா, வி.சி.கட்சியின் கட்டாரி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். கூடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.வாசு தலைமை வகித்தார். கூடலூர் தாலுகா செயலாளர் குஞ்சிமுகமது துவக்கி வைத்தார். மாவட்ட குழு உறுப்பினர்கள் டி.பி.அரவிந்தாசன், கே.ஜி.குமார், சி.முருகன், சிபிஐ பாலகிருஷ்ணன், முகமது, விசிக மாவட்ட செயலாளர் சகாதேவன், துகில்மேகம், மதிமுக பாபு, அண்ணாதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்று கண்டனம் முழங்கினர்.

கோத்தகிரியில் திமுக ஒன்றிய செயலாளர் எக்ஸ்.ஓ.செந்தில் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக மாநில பொதுகுழு உறுப்பினர் பாண்டியராஜன், சிபிஎம் தாலுகா செயலாளர் ரஞ்சித், மாவட்ட குழு உறுப்பினர் கே.மகேஷ், விசிக மண்னரசு, பெரியசாமி, மக்கள் அதிகாரம் இயக்கத்தின் ஆனந்த், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ஜெயக்குமார், திராவிடர் கழகத்தின் வெங்கடேஷ், உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று எச்.ராஜா மற்றும் ஆர்எஸ்எஸ், பாஜகவின் பாசிச செயல்பாடுகளை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.