புதுக்கோட்டை:
தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிவரும் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி புதன்கிழமையன்று புதுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திரிபுராவில் பாஜக குண்டர்கள் மற்றும் மதவெறி சக்தியினர் மாமேதை லெனின் சிலைகளை தகர்த்தனர். இந்தச் சம்பவத்தை ஆதரித்தது மட்டுமல்லாது, தமிழகத்திலும் தந்தை பெரியாரின் சிலை உடைக்கப்படும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

இதனைக் கண்டித்தும், வன்முறையைத் தூண்டும் வகையில் தொடர்ந்து கருத்துக்களைத் வெளியிட்டு வரும் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது திடீரென்று காவல்துறையினர் புகுந்து தடியடி நடத்தினர். இதில் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.விக்கி,சுரேஷ் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். காவல்துறையினரின் இந்த அராஜகத்தைக் கண்டித்து மறியல் நடைபெற்றது.

Leave A Reply

%d bloggers like this: