திருப்பூர், மார்ச் 7 –
அவிநாசியைச் சேர்ந்த இளம்பெண் வங்கதேசத்தில் உயிரிழந்தது தொடர்பாக தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம் வேலாயுதம்பாளையம் செட்டிக்காடு தோட்டத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி செல்வகோமதி. இவர்களது மகள் பூர்ணதேவி (19). இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இங்கு தங்கி பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்த ரிமுஷேக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, மேற்கு வங்கம் சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த பிப்.9-ஆம் தேதி, பூர்ணதேவி இறந்துவிட்டதாக அங்கிருந்து அவரது பெற்றோருக்கு தகவல் வந்துள்ளது. இதனால் பூர்ணதேவியன் பெற்றோர் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.  மேலும், தங்கள் மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரிமுஷேக் தமது மகளை தவறான நோக்கத்துக்கு அழைத்துச் சென்று கடத்தி கொலை செய்திருக்கலாம். ஆகவே, மத்திய, மாநில அரசின் உதவியுடன் தனது மகளின் நிலையை தெரிந்து கொண்டு, அவள் இறந்திருந்தால் சடலத்தை அவிநாசி கொண்டு வர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூர்ணதேவியின் பெற்றோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், அவிநாசி காவல் ஆய்வாளர் கமலக்கண்ணன் தலைமையிலான 4 பேர் கொண்ட காவலர்கள், மேற்குவங்க மாநிலத்துக்குச் சென்று விசாரித்தனர். அங்குள்ள 24 தெற்கு பர்கானா மாவட்டத்தில் ரிமுஷேக் தொடர்பான தகவல்களை சேகரித்தனர். ஆனால் ரிமுஷேக் கொடுத்திருந்த முகவரி போலியானது, அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அந்நாட்டுத் தலைநகர் டாக்கா நகரில் தான் ரிமுஷேக் இருந்துள்ளார். இந்திய முகவரியில் வாக்காளர் அடையாள அட்டை மட்டும் போலியாக தயாரித்து வைத்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பூர்ணதேவி இயற்கையாக இறந்ததாகவும் தெரிகிறது. அவரின் இறப்பு தொடர்பான விவரங்கள், அவர் போலி முகவரிகொடுத்து தங்கியிருந்தது, ரிமுஷேக் அளித்த வங்கிக் கணக்கு, திருப்பூரில் 7 ஆண்டுகள் ரிமுஷேக் இருந்ததாக கூறப்படுவது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்தும் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி இருப்பதாக அவிநாசி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.