விழுப்புரம்:
“விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளைகளும், தலித் மக்கள் மீதான தாக்குதல்களும் பெருகிவரும் நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இதில் உரிய கவனம் செலுத்தாமல் இருப்பதென்பது அறுக்க மாட்டாதவன் இடுப்பில் 58 அருவா என்பதுபோல உள்ளது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் காட்டமாக சாடினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் தலித் மக்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களை கண்டித்தும், வசந்தகிருஷ்ணாபுரம், வெள்ளம்புத்தூர் கிராமங்களில் நடைபெற்ற தலித் இளைஞர்கள், சிறுவன் படுகொலை, இங்கும், செங்கணாங்கொல்லை கிராமத்திலும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளையும், கொலையையும் கண்டித்தும், உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் மார்ச் 7 புதனன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் விழுப்புரம் வடக்கு, தெற்கு மாவட்டக் குழுக்கள் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், “வீரபாண்டியில் தலித் மக்கள் வீடுகள் மீது தாக்குதல், வெள்ளம்புத்தூரில் சிறுவன் கொலை, தாயும், மகளும் தாக்கப்பட்டு உயிருக்கு ஊசலாடும் நிலையில் மருத்துவமனையில் உள்ளனர். இதுபோல பல்வேறு சம்பவங்கள் நடைபெற்ற போதெல்லாம் சிபிஎம் சார்பில் காவல் கண்காணிப்பாளரை உடனுக்குடன் சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம். ஆனால் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்ப்பதிலும், நடவடிக்கை எடுப்பதிலும் மெத்தனமாகவே மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறது. உரிய நடவடிக்கைகளை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்” என அவர் எச்சரித்தார்.

ஆறுதல்!
தம்பியை இழந்து, தாயையும், தங்கையையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில் நீதிகேட்டு இப்போராட்டத்தில் பங்கேற்ற வெள்ளம்புத்தூர் ஆராயியின் மகளுக்கும், வசந்தகிருஷ்ணாபுரம் சம்பவத்தில் தங்கள் இழந்த மகன்கள் கிருபாகரன், வீரமணி ஆகியோரை தாயார்களுக்கும் ராமகிருஷ்ணன் கதராடை போர்த்தி அவர்களின் நீதி கோரிய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

தலைவர்கள்…
இந்த தொடர் முழக்கப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கடலூர் டி.ஆறுமுகம், வேலூர் எஸ்.தயாநிதி, திருவண்ணாமலை எம்.சிவக்குமார், விழுப்புரம் வடக்கு என்.சுப்பிரமணியன், விழுப்புரம் தெற்கு டி.ஏழுமலை, மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.பெருமாள், ஜி.ஆனந்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி, விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளர் ம.செ.சிந்தனைச்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் யு.கே.சிவஞானம், பாரதிஅண்ணா, துணைத் தலைவர் ஜி.ராமசாமி, திருவண்ணாமலை பி.செல்வன், வேலூர் டி.வெங்கடேசன், கடலூர் எஸ். சுப்புராயன், விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவர் எஸ்.முத்துக்குமரன், செயலாளர் ஏ.சங்கரன், பொருளாளர் சவரி, தெற்கு மாவட்டத் தலைவர் ஏ.நடேசன், செயலாளர் ஏஆர்கே.தமிழ்ச்செல்வன், பொருளாளர் ஏ.வீராசாமி, ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில துணை செயலாளர் எஸ்.கீதா, அம்பேத்கர் மக்கள் கட்சியின் மழை மேனி பாண்டியன், குடியரசுக் கட்சியின் அ. மனமோகனதாசன், ஐ. பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: