திரிபுராவில் 4 சிலைகளை அகற்றி விட்டால், இந்த நாட்டில் இருந்து  கம்யூனிஸ்ட்களை அழித்துவிடலாம் என நினைக்க வேண்டாம். அது ஒரு நாளும்  முடியாது என்று பாஜகவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கேரள மாநில முதல்வருமான பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திரிபுராவில் பாஜக மார்க்சிஸ்ட் கட்சியை விட 0.3 சதவிகிதம் கூடுதல் வாக்குகள் பெற்று, திரிபுரா தீவிரவாத பிரிவுடன் இணைந்து ஆட்சியமைக்கிறது. பாஜக வெற்றி பெற்ற வினாடியில் இருந்து அம்மாநிலம் முழுவதும் திட்டமிட்டு வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுகிறது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர்கள்க மற்றும் அவர்களின் வீடுகள், கட்சி  அலுவலகங்கள், தொழிற்சங்க அலுவலகங்கள் உள்ளிட்டவற்றை அடித்து நோறுக்கி தீக்கிரையாக்கி வருகின்றனர். 500க்கும் மேற்பட்ட கட்சி தோழர்கள் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அப்படியும் வெறி அடங்காமல் இரு இடங்களில் இருந்த லெனின் சிலையை ஜேசிபி இயந்திரத்தை கொண்டு அகற்றி தங்களின் வெறியை தீர்த்துக் கொண்டு வருகின்றனர். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்து வருகிறது.

இந்நிலையில் திரிபுராவில் அரங்கேற்றப்பட்டு வரும் சங்பரிவார் கும்பலின் வன்முறை குறித்து கேரள முதல்வர் தனது முகநூல் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும், லெனின் சிலை அகற்றப்பட்ட நிகழ்வும், தேசிய அளவில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக நடக்கும் சதியாகும். 4 சிலைகளை அகற்றிவிட்டால் இந்த நாட்டில் இருந்து கம்யூனிஸ்டுகளை ஒழித்துவிடலாம் என பாஜகவும், ஆர்எஸ்எஸ். அமைப்பும் நினைக்கிறார்கள். ஆனால் கம்யூனிஸ்டுகளை இந்த நாட்டில் இருந்து அகற்றவே முடியாது.

கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக தேசிய அளவில் மிகப் பெரிய சதி நடக்கிறது, அதில் ஒருபகுதிதான் இந்த வன்முறையாகும். நாட்டில் ஜனநாயகத்தையும், மதச் சார்பற்ற தன்மையையும் இன்னும் பாதுகாப்பாக இருந்து வருவது கம்யூனிஸ்டுகளால்தான். இதற்காக ஏராளமான உயிர் தியாகத்தை கம்யூனிஸ்டுகள் செய்து இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: