வீட்டுமனைப்பட்டா கோரி ஆட்சியர் அலுவலகத்தை அங்குசெட்டிப்பாளையம் பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.பண்ருட்டி வட்டம் அங்குசெட்டிப்பாளையம் காலனியில் ஆதிதிராவிடர் வகுப்பினைச் சேர்ந்த சுமார் 120 வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர்.

தனியாருக்குச் சொந்தமான இந்த நிலத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் கையகப்படுத்தி பட்டா வழங்குவதாக தெரிவித்தது. ஆனாலும், நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையிலும் இதுவரையில் பட்டா வழங்கவில்லை. இதனால், சுமார் 35 ஆண்டுகளாக பட்டா பெறாமல் வசித்து வருகின்றனர். இப்பகுதியினருக்கு பட்டா வழங்க வேண்டும்என்ற கோரிக்கை பல்வேறு அரசியல் கட்சியினரால் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில்,மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அங்குசெட்டிப்பாளையம் கிராமத்தினர் சுமார் 60 பேர் லாரியில் வந்தனர். அவர்கள், பட்டாகிடைக்கும் வரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தங்கியிருந்து முற்றுகையிடுவதாக அறிவித்தனர். இதனையடுத்து பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களிடம் பேசிமாவட்ட வருவாய் அலுவலரை சந்திக்குமாறு வலியுறுத்தினர்.

இதனையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயாவை சந்தித்து பொதுமக்கள் மனு அளித்தனர். அதில்,தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 6.83 ஏக்கரில்பட்டா வழங்க வேண்டும். குடியிருப்புகளுக்கு அருகிலேயே செங்கல்சூளை அமைத்து மிகப்பெரிய அளவில் பள்ளம் தோண்டி மக்களுக்கு பாதுகாப்பில்லாத நிலையை உருவாக்கி வருவதைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர்

Leave A Reply