வேலூர் மாவட்டத்தின் பல்வேறு வட்டங்களில் உள்ள விளைநிலங்களை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கே தெரியாமல் வருவாய்த் துறையினர் அளவீடு செய்து, கல் நட்டு விட்டு சென்றுவிடுகின்றனர். இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் தங்களுக்கு எதுவும் தெரியாது என நழுவி விடுகின்றனர்.

பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு தான் நிலம் கையகப்படுத்தும் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு தெரியவருகிறது. அந்த வகையில் சென்னை-பெங்களூரு அதிவிரைவுச் சாலை திட்டம், வெளிவட்டச் சாலை (அவுட்டர் ரிங் ரோடு), திண்டிவனம்-நகரி புதிய ரயில் பாதைத் திட்டம், இயற்கை எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.கடந்த 2004-ஆம் ஆண்டு ரூ. 582 கோடி செலவில் திண்டிவனம்-நகரி இடையே 184 கி.மீ. நீளத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த ரயில்பாதை வழித்தடம் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைக் கடந்து, ஆந்திர மாநிலம், சித்தூர் வழியாக நகரியை சென்றடையும். இந்த வழித்தடத்தில் 12 பெரிய பாலங்கள், 114 சிறிய பாலங்கள், 66 கடவுப்பாதை, 11 மேம்பாலங்கள், 30 தரைவழிப் பாலங்கள் ஆகியன அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தை நிறைவேற்ற பல ஆயிரம் ஏக்கர் விவசாய விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம், சென்னையை அடுத்த எண்ணூரில் இருந்து கர்நாடக மாநிலம், பெங்களூருவுக்கு திருவள்ளூர், வேலூர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் வழியாக ராட்சத குழாய் மூலம் இயற்கை எரிவாயு எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளது. அதற்காக விவசாய விளைநிலங்களில் அடையாளக் கற்கள் நடப்பட்டு, கையப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளேரி, லாலாப்பேட்டை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் நாடு முழுவதும் தொழில்சார் விரைவுச் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் முதல்கட்டமாக தில்லி-ஜெய்ப்பூர்-மும்பை இடையே பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், நாடு முழுவதும் மேலும் 12 பிரத்தியோக சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இவற்றில் சென்னை- பெங்களூரு விரைவுச் சாலை அமைப்பதற்கான மொத்த மதிப்பீடு ரூ. 20 ஆயிரம் கோடி ஆகும்.இதற்கான நில ஆர்ஜிதம் நிறைவு பெற்றப் பிறகு அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சாலை அமைப்புப் பணிகள் தொடங்கும் எனவும், இதற்காக ஒரு கி.மீ. தூரத்திற்கு ரூ. 18 முதல் ரூ. 20 கோடி வரை செலவிடப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மாநில அரசுகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு, தனியார் பொதுத் துறை நிறுவனங்களின் பங்களிப்புடன் இத்திட்டத்தைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள வேலூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் விதமாகவும், பயண நேரம் மற்றும் வாகன இயக்கச் செலவைக் குறைக்கும் நோக்கிலும் வெளிவட்டச் சாலை (அவுட்டர் ரிங் ரோடு) அமைக்கும் திட்டத்துக்குத் தேவையான நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேற்கண்ட பல்வேறு திட்டங்களுக்காக மாவட்டம் முழுவதும் பல்வேறு வட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

  • – கே.ஹென்றி

Leave A Reply

%d bloggers like this: