காஞ்சிபுரம் – மணல் திருட்டில் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப் பட்டிருந்த ஏராளமான மாட்டு வண்டிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பாலாற்றில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் திருடப்பட்டு வந்தது. இதை தடுக்க காவல்துறையினர் பல நடவடிக்கைகளை எடுத்தனர். மாட்டு வண்டிகளில் கடத்தப்படும் மணல் திருட்டை தடுப்பதற்காக மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். நாளடைவில் மணல் திருட்டு கட்டப் படுத்தப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ஏராளமான மாட்டு வண்டிகள் காவல் நிலையங்கள் மற்றும் நீதிமன்ற வளாகங்களில் தேங்கி மக்கி வீணாகிக்கொண்டிருந்தன.சமீபத்தில் காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலையம் புதியதாக கட்டப்பட்டு திருவீதிபள்ளம் என்னும் இடத்திற்கு மாற்றப்பட்டது.

இதனால் பழைய காவல் நிலையத்தில் ஏற்கனவே தேங்கி இருந்த 300 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளை பெரிய காஞ்சிபுரம் பகுதியில் செங்கழுநீரோடை வீதி தர்கா பின்புறம் உள்ள கமால்பாய் என்பவருக்கு சொந்தமான பழைய பொருட்கள் வாங்கும் கடைக்கு விற்று விட்டனர்.மணல் திருட்டில் பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகளை நீதிமன்றத்தின் அனுமதியுடனேயோ அல்லது ஒப்பந்த புள்ளி கோரி டெண்டர் வைத்தோ அல்லது உயர் அதிகாரிகளின் விசேஷ அனுமதி பெற்றுத் தான் விற்பனை செய்யவேண்டும். ஆனால், இவை எதையும் முறையாக செய்யாமல் காயலான் கடை வியாபாரியிடம் சில லட்ச ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு காவல்துறையினர் விற்றுள்ளதாக மாட்டு வண்டி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாட்டு வண்டிகள் விற்பனையை கேள்விப் பட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முகிலன் கமால்பாய் இடத்திற்கு சென்று விசாரணை செய்தார்.

பின்னர் நான்கு பேரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தார். உடைந்த மாட்டு வண்டிகளை மட்டும் காவல் நிலைய வளாகங்களில் எடுக்க வேண்டும் என்று எச்சரித்து காவல்துறையினர் அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால், அதன்பிறகும் அனைத்து மாட்டு வண்டிகளையும் கமால்பாய் எடுத்து வந்துவிட்டதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலையிட்டு முழுமையாக விசாரணை நடத்தவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். மாட்டு வண்டிகளை வாங்கிய கமால்பாய் என்பவர் நல்ல நிலையில் உள்ள மாட்டு வண்டிகளை ஒரு வண்டி 7 ஆயிரம் ரூபாய் என விற்று விட்டதாக கூறப்படுகிறது.வயிற்றுப் பிழைப்பிற்காக மணல் எடுத்து விற்று வாழ்க்கை நடத்திய எங்களை மணல் திருடர்கள் என முத்திரை குத்தி எங்களது மாட்டு வண்டிகளை தராமல் மழையில் ஊற வைத்து,வெயிலில் காயவைத்து கடைசியில் திருட்டுத்தனமாக விற்ற காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாட்டு வண்டி உரிமையாளர்கள் கூறினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.