சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புதனன்று முதல் பிளஸ் 1 வகுப்பிற்கான பொது தேர்வு முதல் முறையாக நடைபெற உள்ளது. இதனை 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகம், புதுச்சேரியில் 7,070 பள்ளிகளில் இருந்து 4,01,509 மாணவர்கள், 4,60,406 மாணவிகள் என 8,61,915 பேர், தனித்தேர்வர்கள் 1,753 பேர் என ஒட்டுமொத்தமாக 8,63,668 பேர் பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதுகின்றனர். இதில் 5,14,498 பேர் தமிழ்வழியில் படித்து எழுதுகின்றனர். மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள் 2,255 பேர். சென்னையில் 407 பள்ளிகளில் இருந்து 49,422 பேர் 156 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். புதுச்சேரியில் 150 பள்ளிகளில் இருந்து 15,404 பேர் 38 மையங்களில் தேர்வில் பங்கேற்கின்றனர். தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்காக 2,795 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வேலூர், கடலூர், புதுக்கோட்டை, கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, புழல் சிறைகளைச் சேர்ந்த 62 ஆண் கைதிகள் புழல் மத்திய சிறையில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் தேர்வு எழுதுகின்றனர்.

அறை கண்காணிப்பாளர்களாக 43,190 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டங்களில் ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி, கோட்டாட்சியர், மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகள் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்வார்கள். தேர்வு மையங்களை ஆய்வு செய்ய, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், தொடக்கக் கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய 4,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வு மைய வளாகத்தில் செல்போன் தடை செய்யப்பட்டுள்ளது. பிட் அடிப்பது, பிற மாணவர்களைப் பார்த்து காப்பி அடித்து எழுதுவது, விடைத்தாள் மாற்றம் செய்வது, ஆள்மாறாட்டம் போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு உடந்தையாக இருந்தால் பள்ளியின் தேர்வு மையம் ரத்துசெய்யப்படுவதுடன் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்துசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: