==== தே.லட்சுமணன்====
தூத்துக்குடியில் காவல்துறையின் முன் அனுமதி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டையொட்டி கட்டுப்பாடோடு நடைபெற்ற செம்படை பேரணியை சீர்குலைக்க காவல்துறையினர் அத்துமீறி நடந்துள்ளனர். அதிகாரி செல்வநாகரத்தினம் காட்டுத்தனமாக நடந்துள்ளார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சென்னை டிஜிபி அலுவலகத்தின் முன்னால் போராட்டம் நடத்தும் என்று கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
காவல் துறையினரின் அராஜகம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அதிகமாக நடந்து கொண்டே இருக்கிறது.

காவல் துறையில் பணிபுரியும் போலீஸ்காரர்களுக்கு அவர்களின் துறை வரலாறே தெரியாது. ஆங்கிலேயர்கள் அடிமை நாடாக இந்தியாவை ஆண்டபோது நாட்டு மக்களை அடிமைகளைப் போல அடக்க – ஒடுக்க அங்கீகரிக்கப்பட்ட அடியாட்களாக உள் ஆட்களையே தேர்வு செய்து ஊதியமும் கொடுத்து காவல் துறையை உருவாக்கியது. அப்படிப்பட்ட அடியாட்களுக்கு கல்வி கட்டாயமில்லை. ஆட்கள் ஆஜானுபாவாக உடல் வலிமையோடு இருந்தால் போதும். தடியடி பிரயோகம் செய்வது எப்படி? துப்பாக்கி சுடுவது எப்படி? என்று பயிற்சி கொடுத்து வைத்திருந்தார்கள். அவர்களுக்கு மாத சம்பளம் ரூ.9. வருட ஊதிய உயர்வு எட்டணா. ஆனால் உத்தரவிடும் மேல் அதிகாரிகள் எல்லாம் ஆங்கிலேயர்களாகவே இருந்தார்கள். மக்கள் இயக்கங்கள், போராட்டங்கள் என்றால் காட்டுமிராண்டித்தனமாக அடித்து ஒடுக்குவார்கள். துப்பாக்கி பிரயோகமும் செய்வார்கள். அப்போதெல்லாம் மனித உரிமைக்கழகமாவது, மண்ணாவது.

சட்டங்களும் கொடுமையானது. தண்டனைகளும் கொடுமையானது. சித்ரவதைகளும் கொடுமையானது. தாய்மார்கள் குழந்தைகளுக்கு சோறு ஊட்டுகிற போது நிலாவைக் காட்டி சோறு ஊட்டுவதுடன் மட்டுமல்ல, சோறு தின்ன அடம்பிடிக்கிற குழந்தையிடம் அதோ போலீஸ்காரன் வருகிறான். பிடித்துக் கொடுத்துவிடுவேன் என்று பயம் காட்டி சோறு ஊட்டுகிற அளவுக்கு போலீஸ் பற்றிய பயத்தை மக்களிடம் உருவாக்கப்பட்டிருந்தது. காரணம், ஆங்கிலேயர்கள் நடத்திய அடிமை ஆட்சி.

நாடு சுதந்திரம் பெற்று குடியரசு நாடாக ஆன பிறகும் கூட, ஆங்கிலேயர்கள் ஆரம்பித்து நடத்திய காவல் துறை ஆட்சி பீடம் ஏறிய காங்கிரசுக்கும், மக்களை அடக்க, ஒடுக்க மிக வசதியாக இருந்த காரணத்தினால் அதனுடைய கட்டுக்கோப்பை குலையாமல், மாற்றாமல் அப்படியே காத்தார்கள். அவ்வப்போது சில ஒப்புக்கான மாற்றங்கள் செய்தார்கள். அவ்வளவே. அப்போதும் போலீஸ்காரர்கள் அடியாட்கள் தான். அவர்களுக்கு எந்த உரிமைகளும் கிடையாது. இயந்திரம் தான். உதாரணமாக, தமிழ்நாட்டில் ராஜாஜி முதலமைச்சராக இருந்த போது முதன்முதலாக எத்திராஜ் என்கிற தலைமை போலீஸ்காரர் சங்கம் அமைத்து கோரிக்கைகளை நிர்வாகத்திடம் கொடுத்தும் பலன் இல்லா காரணத்தினால் தங்கள் அதிருப்தியை தெரிவிக்க முதல் நாள் வாங்கும் சம்பளத்தை மறுத்து இரண்டாம் நாள் வாங்குவதாக முடிவெடுத்தார்கள்.

அன்றைய (சக்கரவர்த்தி) ராஜகோபால் ஆச்சாரியாருக்கு இது போலீஸ்காரர்களின் அத்துமீறலாகப்பட்டது. ஒழுங்கீனமாகப்பட்டது. எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத முறைகேடானது. கர்ஜித்தார். உடனே, அன்றைய மாநில காவல்துறை அதிகாரியை கூப்பிட்டார். அப்போது தெய்வசகாயம் என்கிற ராணுவத்தில் இருந்து விடுபட்ட நபர் தான் போலீஸ் அதிகாரி. அவரோடு கூடி பேசி ஆச்சாரியார் ஒழுங்கீனத்தை அடக்க ரகசிய திட்டமிட்டு ராணுவத்தை கொண்டு வந்து போலீஸ் நிலையங்களில் புகுந்து போலீஸ்காரர்களை ஓட ஓட அடித்து முரட்டுத்தனமாக ஒடுக்கினார்கள். எதிர்பாராத இந்த தாக்குதல்களினால் போலீஸ்காரர்கள் சுவர் ஏறி குதித்து ஓடினார்கள்.

அன்று ஒருவர் ஆட்சேபித்து ராஜகோபால் ஆச்சாரியாரை ஒரு கேள்வி கேட்டார். போலீஸ்காரர்கள் ஜனநாயக போராட்டம் நடத்தினால் ராணுவத்தைக் கொண்டு அடித்தீர்கள். ராணுவம் போராடினால் யாரைக் கொண்டு வந்து அடிப்பீர்கள் என்று கேட்டார். அவர் வேறு யாருமல்ல… தோழர் பி.ராமமூர்த்திதான்.

ராஜகோபால் ஆச்சாரியார் போராட்டத்தை ஒடுக்கியது மட்டுமல்ல, ஹெட் காண்ட்ஸ்டபிள் எத்திராஜ் உள்பட 25 பேரை டிஸ்மிஸ் செய்துவிட்டார். அந்தோ பரிதாபம். நீண்ட நாட்கள் அந்த சங்கம் எழுந்திருக்கவேயில்லை.

அடுத்து கலைஞர் ஆட்சிக்காலத்தில் பிரிட்டோ என்கிற போலீஸ்காரர் தலைமையில் சங்கம் உருவானது. சில கோரிக்கைகளை வைத்து இயங்கினார்கள். ஆனால், பிரிட்டோவும் வேலைநீக்கம் செய்யப்பட்டார். பிறகு நீண்ட நாள் பாடாய் பட்டு அவர் வேலையில் அமர்த்தப்பட்டார். ஆனால், கடைசி வரை சங்க அங்கீகாரம் கிடைக்கவில்லை.
எம்ஜிஆர் காலத்திலும் சங்கம் அமைக்கப்பட்டு அங்கீகாரம் கேட்டது. அங்கீகாரம் மறுக்கப்பட்டது. அவர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருந்த போது எந்த கட்சியும் அதை ஏற்றுக்கொள்ளாத போது, தோழர் ஆர்.உமாநாத் தான் சென்று மாலை அணிவித்து போராட்டத்தை வாழ்த்திப் பேசினார். ஜெயலலிதா காலத்தில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. மேற்குவங்கம், திரிபுரா, கேரள இடதுசாரி அரசுகள் தான் போலீசாருக்கு சங்கம் வைக்கும் உரிமை வழங்கின.
கீழ்மட்ட போலீஸ்காரர்களின் சிரமங்களை தொழிலாளி வர்க்க கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி தான் நன்கு அறிந்துள்ளது. அவர்களும் உழைப்பாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான். ஆனால், அத்துமீறி மக்களுக்கு எதிராக நடந்தால் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால், அவர்களின் உரிமைகளுக்காக அவர்கள் சங்கம் வைத்துக்கொள்ள வேண்டுமென்று கோருகிற கட்சி தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

திரிபுராவில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 500 போலீஸ்காரர்கள் கோரிக்கைகளுக்காக போராடிய காரணத்தினால் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருந்தார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி பீடம் ஏறிய போது அன்றைய முதலமைச்சர் தசரத் தேவ் பதவி ஏற்ற போது முதல் கையெழுத்து அந்த போலீஸ்காரர்களுக்கு மீண்டும் வேலை நியமனம் செய்தார். அதுமட்டுமல்ல, 5 ஆண்டுகளுக்கான ஊதிய நிலுவையையும் தந்தார்.

அதேபோல், ஜோதிபாசு முதலமைச்சராக பதவி ஏற்ற போது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அரசு ஊழியர்கள் போராடியதற்காக முக்கியமான தலைவர்கள் 30 பேரை டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்களை மீண்டும் வேலையில் அமர்த்தி ஊதியத்தொகையையும் வழங்கினார். அந்த ஊதிய தொகையை அந்த தலைவர்கள் அப்படியே சங்கத்திற்கு கொடுத்துவிட்டார்கள். காரணம் – டிஸ்மிஸ் செய்யப்பட்டிருந்த காலத்தில் சங்கம் தான் அவர்களுக்கு ஊதியம் தந்தது.
தமிழகத்தில் உள்ள போலீஸ்காரர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். உங்கள் அதிகாரிகள் உங்களை கடுமையாக வேலை வாங்குகிறார்கள். ஒரு அதிகாரி ஒரு போலீஸ்காரரை நாயே, கழுதையே, மடையா, வயித்துக்கு என்ன சாப்பிடுகிறாய் எருமையா நீ என்று கடுமையாக ஏசியதை நானே நேரில் கேட்டிருக்கிறேன். பாவம் அந்த போலீஸ்காரர் வாய் திறக்காமல் மவுனியாக அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார். போலீஸ்காரர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் தான். இதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

நீட் தேர்வை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் போராடினால் அது போலீஸ்காரர்கள் வீட்டு பிள்ளைகளுக்காகவும் சேர்த்து தான் போராடுகிறார்கள். பெட்ரோல் விலை உயர்ந்தாலோ அதை எதிர்த்து போராடுகிற போது போலீஸ்காரர்களும்தான் பயன் பெறுவார்கள். ஜனநாயக வாலிபர் சங்கம் வேலை கேட்டு போராடுகிற போது, எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் கல்வி என்று மாணவர் சங்கம் போராடுகிற போது போலீஸ்காரர்களின் பிள்ளைகளுக்காகவும் சேர்த்து தான் போராடுகிறார்கள்.

ஆங்கிலேயர்கள் ஆண்ட போது மக்களிடமிருந்தே வரியாக பணத்தைப் பெற்று அந்த தொகையிலேயே போலீஸ்காரர்களுக்கு சம்பளம் கொடுத்து உள்ளூர் மக்களை அந்த போலீசைக் கொண்டு தாக்கவும் செய்தார்களே. அப்படித்தான் இப்போதும் உங்களை வைத்தே நியாயம் கேட்டு போராடுகிற மக்களையும் ஆட்சியாளர்கள் தாக்குகிறார்கள். நீங்கள் உங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுத்தால், போராடினால் உங்களையும் தாக்குகிறார்கள். அந்த நேரத்தில் உங்களோடு தோள் கொடுத்து நிற்பவர்கள் கம்யூனிஸ்டுகள் தான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மாநில அரசுகளும், மத்திய அரசும் போலீஸ்துறையின் குணாம்சங்களை மாற்ற எடுப்பதாக சொல்லிக்கொண்டு எத்தனையோ கமிஷன்களை வைத்தார்கள். ஆனால், அவையெல்லாம் வெறும் கண்துடைப்புக்காக அமைக்கப்பட்டதுதான். எந்த மாற்றமும் அதில் ஏற்படவில்லை. காரணம். அதன் வர்க்க குணம் மாறாது. போலீஸ் என்பது ஆளும்வர்க்கத்தின் ஏவல் அமைப்பு. தனிப்பட்ட சிலர் நல்லவர்களாக இருக்கலாம். இந்த உண்மைகளை கீழ்மட்ட போலீஸ்காரர்கள் தெரிந்து கொள்வது நல்லது.

Leave a Reply

You must be logged in to post a comment.