புதுதில்லி:
இரயில் பயணங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்படியாக செய்து தர வேண்டிய வசதிகளை நிறைவேற்றக்கோரி ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை சார்பில் மார்ச் 6 செவ்வாய்க்கிழமையன்று தில்லியில் நாடாளுமன்ற வீதியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் அகில இந்திய துணைத்தலைவர் பா. ஜான்சி ராணி தலைமை வகித்தார்.சட்டம் அங்கீகரித்துள்ள மன நோயாளிகள் மற்றும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒரே மாதிரியான சலுகை கட்டணங்கள், சுவிதா உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் வழங்க வேண்டும். முதியோருக்கு உள்ளது போல டிக்கெட் எடுக்கும் கவுண்ட்டர்களில் அடையாள அட்டையை மாற்றுத்திறனாளிகளுக்கு கேட்கக் கூடாது. பயணத்தின்போது பரிசோதகரிடம் காண்பிக்கலாம். ரயில்வே நிர்வாகம் தற்போது மாற்றுத்திறனாளிகளை அலைக்கழித்து வாங்க வைக்கும் தனியான அடையாளச் சான்றை நிறுத்த வேண்டும்.

அனைத்து இரயில் நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய தடையற்ற வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் பொதுச்செயலாளர் முரளிதரன், அகில இந்திய நிர்வாகிகள் மோகனன், கிரிஷ் கீர்த்தி, ரிஷிகேஷ், சம்பா சென் குப்தா, தமிழகத்தில் இருந்து அப்பு என்கிற வெங்கடேஷ், டெப் பிளைண்ட் அமைப்பின் சார்பாக பார்கவ் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதனைத்தொடர்ந்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், மாலை 4 மணியளவில் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் முரளிதரன், துணைத்தலைவர் பா. ஜான்சி ராணி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட ரயில்வே அமைச்சர், கோரிக்கைகளை பரிசீலித்து விரைவில் நடவடிக்கைகள் எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.