கால்நூற்றாண்டுக்குப் பிறகு திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுமுன்னணி ஆட்சியை இழந்துள்ளது. ஏற்கெனவே மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகள் ஆட்சிபுரிந்த பிறகு இடதுமுன்னணியும் ஆட்சியை இழந்துவிட்டது.
இந்த இரண்டு கட்டங்களிலும் சில தனிநபர்களும் ஊடகங்களும் கம்யூனிசத்திற்கு இனி எதிர்காலம் இல்லையென்றும், மார்க்சிசத்திற்கு இனி இறுதிக் காலமே உள்ளது என்றும் உரத்தப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டனர்.

கேரளத்தில் 2016-இல் ஆட்சிக்கு வரும்வரை இடதுமுன்னணிக்குத் திரிபுராவில் மட்டுமே ஆட்சி இருந்தது. இதுபோன்ற நிலைமை இதற்கு முன்னும் இருந்தது. கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணியைப் பலவீனப்படுத்த வேண்டும் என்கிற குறிக்கோளைக் கொண்டதுதான் பெரும்பாலும் இந்தப் பிரச்சாரங்களெல்லாம். ஆனால், இந்தப் பிரச்சாரத்தை நம்பி விரக்தியடைந்து செங்கொடியைக் கைவிட்டவர்களல்ல நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட்-இடதுசாரி- முற்போக்கு நம்பிக்கையாளர்கள் என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்கட்டும்.

பல பத்தாண்டுகளின் நெடிய சோதனைக் கட்டங்களையும் சவால்களையும் கொலைக் கத்திகளையும் வென்றுதான் உலகமெங்கும் – இந்தச் சின்ன கேரளத்திலும் கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்ச்சிப் பெற்றுவந்துள்ளது.

கல்லும் முள்ளும் நிறைந்த பாதையைக் கடந்துதான் உலகில் எங்கும் கம்யூனிசம் செல்வாக்குப் பெற்றுள்ளது. மார்க்சும் ஏங்கெல்சும் சேர்ந்து கம்யூனிஸ்ட் அறிக்கை எழுதி உருவாக்கி வெளியிட்ட நாள் முதலே ஒலிக்க ஆரம்பித்ததுதான் கம்யூனிசத்திற்கு எதிர்காலம் இல்லை என்கிற பிரச்சாரம். கம்யூனிச சித்தாந்தத்திற்கு கடந்த காலமும் நிகழ்காலமும் இருந்தாலும் அதற்கு எதிர்காலம் எதுவும் இல்லை என்று ஆஸ்திரியப் பொருளாதார நிபுணர் யுஜின்போம்வோன் பாவர்க் கூறினார். மதத்தை அவமதிப்பவர்களின் இருட்டு உலகில்தான் மார்க்ஸ்க்கு இடம் உள்ளது என்றார் ஜான் மெய்னார்டு கெயின்ஸ். பயனற்ற சிந்தனையாளர் மார்க்ஸ் என்றார் சாமுவல்சன்.

மார்க்ஸ் ஏங்கெல்ஸின் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளிவந்த உடனே ஐரோப்பாவில் 1848-இல் புரட்சி எழுந்தது. பிரான்சிலும் மற்ற நாடுகளிலும் அது தோல்வியுற்றபோது ‘புரட்சிகளின் வீழ்ச்சி’ என்று முதலாளித்துவ ஊடகங்களும் முதலாளித்துவ அரசியல்வாதிகளும் செவி அதிரும் பிரச்சாரம் நடத்தினர். தொழிலாளி வர்க்கத்தின் ஆபத்து முற்றுப்பெற்றது என்று அந்தக் கூட்டத்தினர் மகிழ்ச்சியடைந்த தருணத்தில்தான் பாரீஸில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றி உலகை அதிரச்செய்தது தொழிலாளி வர்க்கம். ஒரு வாரம் மட்டுமே நிலைப்பெற்றிருந்த பாரீஸ் கம்யூனை முதலாளித்துவக் கூட்டம் இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது.

பாரீஸ் கம்யூனின் தோல்விக்கு அடுத்து 46 ஆண்டுகளுக்குப் பின்னர் ரஷ்ய தேசத்தில் தொழிலாளி வர்க்கத்தின் முழுப்புரட்சி முதன்முறையாக நிகழ்ந்தது. இதைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் எதிர்ப்புப் பிரச்சாரம் அதன் முழு மூர்க்க வடிவத்தில் வெளிப்பட்டது. கம்யூனிஸத்தை ஒழிப்பதற்காக முதலாளித்துவம் அதுவரை உயர்த்திப் பிடித்த அரசியல் மிதவாதக் கொள்கையைத் தூக்கியெறிந்துவிட்டு உலகெங்கும் ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஆதரவளிக்கவும் அவர்களை அதிகாரத்தில் ஏற்றவும் முயற்சித்தது என்று பிரபல வரலாற்றாசிரியர் எரிக் ஹோப்ஸ்பாம் கூறினார். கம்யூனிஸத்தை வீழ்த்துவது என்கிற இலட்சியத்துடன் அமெரிக்காவும் மேற்கத்திய உலகும் பனிப்போருக்குத் துவக்கமிட்டன. ஜார்ஜ் ஃப்ராஸ்ட் கென்னான் என்பவரின் ‘பாலிஸி ஆஃப் கண்டெய்ன்மென்ட் மார்ஸல்’ திட்டமும், கோல்டு வாட்டர் இஸமும், இதுபோன்ற மற்ற எல்லாவற்றின் குறிக்கோளும் சோசலிசத்தை வீழ்த்துவதிலேயே இருந்தது.

கம்யூனிஸத்திற்கு எதிராகக் கருத்துப் பிரச்சாரக் குண்டு எறிய வின்ஸ்டன் சர்ச்சில் அறைகூவல் விட்டார். சோசலிசத்தைத் தகர்த்திட பாசிஸ்ட் – நாஜிக் கட்சிகள் முயன்றபோது இரண்டு கோடிப் பேரின் உயிர் தியாகத்தினால் சோவியத் யூனியன் அந்தத் தீய முயற்சியைத் தோல்வியுறச் செய்தது. அவர்களால் சோசலிச இலட்சியங்களை வீழ்த்த முடியவில்லை என்பது மட்டுமல்ல, அந்த இலட்சியங்கள் வியாபிக்கவும் செய்தது. சீனா, கொரியா, வியட்நாம், கியூபா, மத்திய-லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளிலெல்லாம் சோசலிசத்தின் கொடி ஓங்கி உயர்ந்தது.

இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் கட்சி வலுப்பெற்றது. புன்னப்புரா-வயலார், கய்யூர், தெலங்கானா, தேபகா போராட்டங்கள் மூலம் கம்யூனிஸ்ட் இயக்கம் இந்திய மக்களிடம் எழுச்சியூட்டியது. நாட்டின் முதலாவது பொதுத்தேர்தல் மூலம் கம்யூனிஸ்ட் கட்சி கேரளத்தில் ஆட்சிக்கு வந்தது. அதைக் கவிழ்ப்பதற்கு அமெரிக்க உளவு ஸ்தாபனமாகிய சிஐஏவும் இந்திய ஆளும் வர்க்கமும் கைகோர்த்தன. மேற்கு வங்கத்தில் இடதுமுன்னணி அரசைக் கவிழ்ப்பதற்கும் கேரளத்தில் நடத்திய போன்ற முயற்சிகள் நடந்தன. சோவியத் யூனியனைத் தகர்த்தது போல் கம்யூனிசத்திற்குச் சாவுமணி என்று பல தீய சக்திகளும் களத்தில்
இறங்கின.

சிவப்பு ஆபத்துக்கு முடிவுகட்டப்பட்டது என்று அமெரிக்கா உரத்துக் கூவியபோது சோசலிசம் செத்துவிட்டதென்று மேற்கத்திய ஊடகங்கள் ஊளையிட்டன. கம்யூனிசம் இனி ஒருபோதும் மேலெழ முடியாது என்று கேரளத்தின் முதிய பத்திரிகைகள் செப்பின. சோவியத் யூனியன் தகர்ந்ததில் உலகெங்குமுள்ள வலதுசாரி சக்திகளின் கண்கள் பஞ்சடைந்து போயின.

ஆனால், ஆவேசமான இந்தப் பிரச்சாரத்திற்கு நடுவேயும் கம்யூனிஸ்ட் கொள்கைகள் உறுதியுடன் நிலைநிற்கின்றன என்பது மட்டுமல்ல, உலகில் பல நாடுகளிலும் இடதுசாரிசக்திகள் வலுப்பெற்றும்வருகின்றன. சீனா, வியட்நாம், வடகொரியா, கியூபா, லாவோஸில் மட்டுமல்ல, வெனிசுலாவிலும் பொலிவியாவிலும் நிகரகுவாவிலும் மற்ற நாடுகளிலும் இடதுசாரிசக்திகளுடன் அணிசேர்ந்து தன்னை வலுப்படுத்திக் கொண்டுள்ளது. மிக அண்மையில்தான் நேப்பாளத்திலும் செங்கொடி அதிகாரத்திற்கு வந்துள்ளது.

நாட்டில் ஒடுக்கப்பட்டவர்களும் தலித்துகளும் சிறுபான்மையினரும் பிற்பட்டோரும் முன்னர் எப்போதும் இல்லாதவாறு ஒன்றுபட்டுப் போராடுகிறார்கள். கம்யூனிசத்திற்கும் அம்பேத்கரிசத்திற்குமிடையேயான ஒற்றுமையும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உருவாகிறது. வரலாற்றின் இந்த வளர்ச்சி நிலையையெல்லாம் காணாதவர்களைப் போல் நடித்துத்தான் பலர் கம்யூனிசத்திற்கு மரணக் குறிப்பு எழுதுகிறார்கள். அவர்களது நோக்கம் நிறைவேறாது என்று நாம் உறுதியாகக் கூறுகிறோம்!

– மலையாள நாளிதழ் தேசாபிமானி தலையங்கம் (5.3.2018)
தமிழில்: தி.வரதராசன்

Leave a Reply

You must be logged in to post a comment.