ஆளும்கட்சி தொழிற்சங்கத்தின் அடிமையாக நிர்வாகம் மாறிவிடக் கூடாது என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் கூறினார்.
தொழிற்சங்க தலைவர்களுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாகப் போடப்பட்டுள்ள இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு விரைவு போக்குவரத்து கழக அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் சென்னை பல்லவன்இல்லம் அருகே உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு செவ்வாயன்று (மார்ச் 6) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநிலப் பொருளாளர் ரவி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாடத்தில் ஆறுமுக நயினார் பேசியதாவது:ஊர் மாறுதல் என்பது ஒரு துரு பிடித்த ஆயுதம். துருப் பிடித்த ஆயுதத்தைப் பயன்படுத்தி தொழிற்சங் கங்களை அழித்து விடலாம் என்று போக்குவரத்து கழகங்கள் நினைக் கின்றன. ஊர் மாற்றம் செய்து ஒரு தொழிற்சங்க தலைவரைப் பழிவாங்குவதன் மூலம் தொழிற் சங்கத்தை அழித்து விடமுடியாது. எனவே நிர்வாகம் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. ஆளும்கட்சி தொழிற்சங்கத்தின் அடிமையாக நிர்வாகம் மாறக் கூடாது. நிர்வாகத்தை நடத்துவதற்கு பொது மேலாளர், மேலாண்மை இயக்குநர், பணிமனையிலே கிளை மேலாளர் இருக்கிறார்கள். ஆனால் அனைத்துப் பணிமனைகளிலும் பணிமனை நிர்வாகத்தை அண்ணா தொழிற்சங்கத்திடம் ஒப்படைக்கக் கூடிய கேவலமான நிலைமை இருக்கின்றது.
எனவே நிர்வாகம் நிர்வாகமாக நடக்க வேண்டும்.நிர்வாகம் பொது அமைப்பாக இருக்க வேண்டும். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க நிர்வாகத்திற்கு உரிமை இருக்கின்றது. நிர்வாகம் தவறாக நடவடிக்கை எடுத் தால் அதைத் தவறு எனச் சுட்டிக் காட்ட தொழிற்சங்கத்திற்கும் உரிமை இருக்கிறது. ஆனால் இதில் ஆளும் கட்சி சங்கத்தின் தலையீடு, அதைக் கேட்டு நிர்வாகம் செயல்படுவது நடைமுறைக்கு விரோதமானது. இப்படிப்பட்ட நடவடிக்கைகள் கழகத் தின் செயல்பாடுகளைப் பாதிக்கும். கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாகப் பலகட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். இரண்டு வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டிருக்கிறோம்.
பிற அரசுத் துறை ஊழியர்களை விடப் போக்குவரத்து தொழிலாளர்கள் அரசால் வஞ்சிக்கப்பட்டுள் ளனர். பிற துறை ஊழியர்களுக்கு 2.57 காரணி ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படுகிறது. ஆனால் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 2.44 காரணிக்கு மேல் ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடமுடியாது எனக் கூறி ஒப்பந்தம் போடப்பட்டது. மறைமுகமாகப் போட்ட அந்தத் துரோக ஒப்பந்தத் தைத் தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 1 லட்சத்து 15 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை நிறுத் தத்தில் பங்கேற்றனர்.வேலைநிறுத்தம் நடைபெறுவதையொட்டி நீதிமன்றம் தலையிட்டது. நீதிமன்றம் வேலை நிறுத்தத் திற்குத் தடை விதித்தது. ஆனால் எங்களது நியாயத்தைப் பெற நாங் கள் எங்கள் போராட்டத்தை வாபஸ் பெற முடியாது எனத் தொழிலாளர்கள் போராடினார்கள்.
நீதிமன்றம் தொழிலாளர்கள் பக்கம் உள்ள நியாயத் தைக் கேட்ட பிறகு பிரச்சனைகளை தீர்க்க நடுவர் மன்றத்தை நியமித்தது. இப்போது நடுவர் மன்றத்தில் விசாரணைகள் முடிந்து விட்டது. நடுவர் மன்றத்தில் நம்முடைய நியாயங் களை எடுத்துக் கூறியிருக்கிறோம். உறுதியாக இந்தத் துரோக ஒப்பந்தம் முறியடிக்கப்பட்டு ஊதிய உயர்வு கிடைக்கும்.மத்திய அரசு புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை கொண்டு வந்தால் இங்குள்ள அதிகாரிகள் உட்பட போக்குவரத்து கழகத்திற்கு மிகப் பெரிய ஆபத்து உள்ளது. எனவே அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். வரும் 13ஆம் தேதி அனைத் துத் தொழிற்சங்கங்களும் இணைந்து சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். அந்த ஆர்ப்பாட் டத்தில் மோட்டார் வாகன தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் பங்கேற்க வேண்டும். நிர்வாக இயக்குநர், பொதுமேலாளருடன் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினோம். பிரச்சனைகளைச் சுமூகமாக தீர்த்துத் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். இதையடுத்து இந்தப் போராட் டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கிறோம் என்றார்.இவ்வாறு அவர் பேசினார்.
500 நாட்கள் பணிமுடித்த ரிசர்வ் தொழிலாளர்களுக்குப் பணி எண் வழங்க வேண்டும், 800 நாட்கள் பணி செய்த தினக் கூலி தொழிலாளர் களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், விபத்திற்கு ஓட்டுநரே என காரணம் கூறி கட்டாய இடமாற்றம் செய்யக்கூடாது, 35 ஆண்டுகள் பணிமுடித்த தொழில்நுட்ப ஊழியர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும், 7 ஆண்டுகள் கடந்து 13 லட்சம் கிலோ மீட்டர் ஓடி முடித்த வண்டிகளைச் சேவையில் இருந்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.இதில் அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) பொதுச் செயலாளர் கனகராஜ், சம்மேளன செயலாளர் பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் சந்திரன், ஏஐடியுசி பொதுச் செயலாளர் சக்ரபாண்டி, அரசப்பன் (எச்.எம்.எஸ்), நாகராஜன் (டி.டி.எஸ்.எப்) உள்ளிட்ட கூட்டமைப்பின் நிர்வாகிகளும், ஏராளமான தொழிலாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.