திருப்பூர், மார்ச் 5-
வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருப்பூர் காங்கயம் சாலை நல்லூர் ஆதிதிராவிடர் குடியிருப்பைச் சேர்ந்த பொதுமக்கள் திங்களன்று தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் காலனியில் 150 குடும்பங்கள் உள்ளன. பல தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வருகிறோம். எங்கள் குடும்பங்களில் குழந்தைகள் பெரியவர்களாகி, இன்றைக்கு ஒரே வீட்டில் 5 குடும்பங்கள் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் இடநெருக்கடியுடன் போதிய வசதியின்றி வாழ்ந்து வருகிறோம். இன்றைக்கும் பலர் பின்னலாடை நிறுவனங்கள், விவசாயக் கூலித்தொழிலாளர்களாக வாழ்ந்து வருகிறோம்.

ஆகவே, எங்களுக்கு அரசு வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி பலமுறை கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் எங்கள் பகுதியை சிலர் ஆக்கிரமிக்க முயன்று வருகின்றனர். எனவே, எங்கள் குடியிருப்பில் வசிக்கும் 50 பேருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சட்ட மன்ற உறுப்பினர் குணசேகரன் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின் வீட்டுமனைப் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: