கோவை, மார்ச். 5-
டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாரபட்சமற்ற முறையில் பணி பாதுகாப்பை உறுதிசெய்யக்கோரி சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரனிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: அரசின் கொள்கை முடிவு மற்றும் நீதிமன்ற தலையீடு காரணமாக கோவை மாவட்டத்தில் தெற்கு மற்றும் வடக்கு ஆகிய பகுதிகளில் 21 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டது. இதில் பணியாற்றிய 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தற்போது வரை எவ்வித பணிப்பாதுகாப்பு அற்ற நிலையில் இருந்து வருகின்றனர். இதுகுறித்து ஊழியர்களின் தொடர்ச்சியான போராட்டத்தையடுத்து செயல்படும் இதர டாஸ்மாக் கடைகளில் பணியாற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இதர டாஸ்மாக் கடைகளில் உள்ளவர்கள் இந்த உத்தரவுகளை அமலாக்க மறுப்பதோடு, ஊழியர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்
குகின்றனர்.

மேலும், கடந்த ஓராண்டுக்கு மேலாக மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் விற்பனை உதவியாளர்களின் வாழ்நிலை பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளது. ஆகவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மூடப்பட்ட கடைகளில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு பாரபட்சமின்றி பணிப்பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். இதேபோல், டாஸ்மாக் ஊழியர்களை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணிமாறுதல் செய்ய வேண்டும். மதுபானக் கூடத்தில் ஒப்பந்ததாரர்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத செயல்பாடுகளை தடுத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. அனுமதி மறுப்பு: தர்ணாமுன்னதாக, டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.மூர்த்தி, பொதுச்செயலாளர் ஜான்அந்தோனிராஜ், சிஐடியு மாநில துணை தலைவர் எஸ்.ஆறுமுகம், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் டாஸ்மாக் சங்க நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், விஜயராகவன், முத்துவிஜய் உள்ளிட்டோர் தலைமையில் டாஸ்மாக் ஊழியர்கள் திரளானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்றனர்.

அப்போது, அங்கிருந்த காவல்துறையினர் குறைவான நபர்களே உள்ளே செல்ல வேண்டும் என்று அனைவரையும் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து சங்க நிர்வாகிகள் சிலர் மட்டுமே உள்ளே செல்ல முற்பட்டனர். ஆனால் அதற்கும் அனுமதி மறுத்து ஓரிருவர் மட்டுமே செல்ல வேண்டும் என காவல்துறையினர் கெடுபிடி செய்ததால் ஆவேசமடைந்த சங்க நிர்வாகிகள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் குறைகேட்கும் கூட்டரங்கு முன்பு அமர்ந்து காவல்துறையினரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறை உயரதிகாரிகள் சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் உள்ளே செல்ல அனுமதித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.