கோவை, மார்ச். 5-
நிர்வாக முறைகேட்டை சுட்டிக்காட்டும் ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து இலவச அமரர் ஊர்தி ஓட்டுநர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக சிஐடியு கோவை மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் இலவச அமரர் ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தின் சுரேஷ்குமார், சரவணன், ஏசுராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் திங்களன்று அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, கோவை அரசு மருத்துவமனையில் இலவச அமரர் ஊர்தி மற்றும் தாய், சேய் நல ஊர்தியை ஒப்பந்த முறையில் இந்திய செஞ்சிலுவை சங்கம் இயக்கி வருகிறது. இதில் 14க்கும் மேற்பட்டேர் 7 ஆண்டுகளாக ஓட்டுனர்களாக பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு நிர்வாகம் சார்பில் அரசு குறிப்பிட்டுள்ள தினக்கூலி வழங்கப்படுவதில்லை.

மேலும், பணி நேரம் வரையறை செய்யப்படவில்லை. வாகன எண்ணிக்கை உயர்த்தவில்லை, ஓட்டுநர்களின் எண்ணிக்கையும் போதுமானதாக இல்லை. சடலங்களை கொண்டு செல்லும் ஊழியர்களுக்கு தொற்றுநோய் பரிசோதனை செய்வதில்லை. இதுபோன்ற ஊழியர் நலன் சார்ந்த கோரிக்கைகளை அரசு நிர்வாகத்திடம் தெரிவித்தால் பணிநீக்கம் உள்ளிட்ட பழிவாங்கும் நடவடிக்கையில் ஐஆர்சிஎஸ் நிர்வாகம் ஈடுபடுகிறது. எனவே, இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட வேண்டுமென வலியுறுத்தி இருந்தனர்.

பணி நிரந்தரம் கோரி மனு
இதேபோல், கோவை மண்டலத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் மின் பணியாளர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது. கோவை மண்டலத்திற்குட்பட்ட அனைத்து மின்வாரிய பிரிவு அலுவலகங்களிலும் மின்பணிகளை மேற்கொள்ளும் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். 2008ம் ஆண்டு முதல் வாரியம் சார்பில் இந்த ஊழியர்களுக்கு எந்த பணிபயனும் வழங்கவில்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். கோவை குறிச்சி பகுதி இட்டேரி பால்சாமிநாயுடு வீதி, உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை குடிசை மாற்றுவாரியத்தினர் காலிசெய்துள்ளனர். இவர்களுக்கான வீடுகளை வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பில் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தனர். ஆனால், இக்குடியிருப்பு ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளது. முறையாக ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு வீடு வழங்கப்படவில்லை. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெண்கள் பங்கேற்று கும்மியடித்து போராட்டத்தில் ஈடுபட்டு மனு அளித்தனர்.

கஞ்சா விற்பனையை தடுத்திடுக
இதேபோல், கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை என்பது கட்டுக்கடங்காமல் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் தொடர்ந்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை மேற்கொள்வதில்லையென குற்றம்சாட்டி ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் வே.ஈஸ்வரன் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave A Reply

%d bloggers like this: