தேனி:
திரிபுரா மாநில தேர்தலில் பாஜக ஆட்சி அமைய காங்கிரஸ் கட்சியினர் துணை போனதாக கேரள மின்துறை அமைச்சர் எம்.எம்.மணி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட கேரளா மின்சாரத் துறை அமைச்சர் எம்.எம்.மணி, பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக, கேரள மக்களிடையே தொடர்ந்து நல்லுறவு இருந்து வருகிறது. தமிழக – மலையாள மக்கள் சகோதரர்களாக இருக்க வேண்டும் என்பதே எல்லோரது விருப்பமாக உள்ளது.
திரிபுரா தேர்தலில் ஜனநாயகம், பணநாயகமாக மாறி விட்டது. 35 சதவீதம் வாக்கு வங்கி உள்ள காங்கிரஸ் கட்சி, பாஜகவிற்கு துணை போனது. இதே போல் இதர கட்சிகளையும் பா.ஜ.க. அரசு விலைக்கு வாங்கி விட்டது. இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களை ஒப்பிடும்போது, சிறப்பாக ஆட்சி செய்து பெருமை தேடி தந்தவர் திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார். அதை பாஜக, பணநாயகத்தின் மூலம் வீழ்த்திவிட்டது.

முல்லைப் பெரியாறு
முல்லைப் பெரியாறு அணை சம்பந்தமாக தற்போது எந்த பிரச்சனையும் இல்லை. உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது உச்சநீதிமன்ற தீர்ப்பை அனுசரித்து செல்வதே நல்லது. மேலும் இது தொடர்பாக, இரு மாநில அரசும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே முடியும். உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி கேரளா அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காது.முல்லைப் பெரியாறு அணைக்கு வல்லக்கடவு வழியாக மின்சாரம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு, கேரளா அரசை முறைப்படி அணுகினால் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு எம்.எம்.மணி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: