திருப்பூர், மார்ச் 5 –
சிரியாவில் ஏகாதிபத்திய நாடுகளின் காட்டுமிராண்டித்தனமான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பூர் அருகே மங்கலம் நால்ரோடு சந்திப்பில் ஞாயிறன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மங்கலம் கிளைச் செயலாளர் அலாவுதீன் தலைமை ஏற்றார். இதில் சிரியா மக்களின் மீது கண்மூடித்தனமான வான்வெளி தாக்குதல் நடத்தி குழந்தைகள், பொதுமக்களை கொன்று குவிக்கும் ஏகாதிபத்திய நாடுகளின் கண்மூடித்தனமான செயலைக் கண்டித்தும், அங்கு நிரந்தர அமைதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்காத ஐ.நா சபையைக் கண்டித்தும், ஏகாதிபத்திய நாடுகளின் தலையீட்டுக்கு கண்டனத்தை பதிவு செய்யாத இந்திய மோடி அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

முன்னதாக, இக்கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் காவல்துறை அனுமதி மறுத்ததால், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வாலிபர் சங்க திருப்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.உமாசங்கர், ஜே.எம்.யாசுதீன், மகாலிங்கம், தமுமுக ரஹீம், முஃபீஸ். சையது இப்ராஹீம் (பாஷா) ஆகியோர் கண்டனவுரை ஆற்றினர். முடிவில், வாலிபர் சங்க கெள்ளுக்காடு கிளைச் செயலாளர் சம்சுதீன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோடு:
ஈரோடு அம்பேத்கர் நகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் ஏராளமான குழந்தைகள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதில் வாலிபர் சங்க மாவட்ட அமைப்பாளர் சகாதேவன், நிர்வாகி அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

சேலம்:
சேலம் புதிய பேருந்து நிலையம் முன்பு வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.பிரவின்குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.