ஈரோடு, மார்ச் 5-
கொத்தடிமையாக நடத்தும் தறிப்பட்டறை உரிமையாளரை கண்டித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம், வீரபாண்டி அருகேயுள்ள அரியலூரை சேர்ந்தவர் எஸ்.கன்னியப்பன் (37). இவர் திங்களன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில், மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அங்கிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர், ஈரோடு, சூரம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தற்கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அப்போது அவர் கூறியதாவது: நான் வசிக்கும் பகுதியில் உள்ள அரிசிக்கார ஆறுமுகம் பட்டறை என்ற தறிப்பட்டறையில் பணி செய்து வந்தேன். அப்போது இப்பட்டறையின் உரிமையாளரான லோகநாதன் என்பவரிடம் இருந்து ரூ.90 ஆயிரம் கடன் பெற்றிருந்தேன். இதன்பின் ஊதியத்தில் பிடித்தம் செய்து முழுவதுமாக அடைத்துவிட்டேன். ஆனால். இதுநாள்வரை என்னிடம் எழுதி வாங்கிய பாண்டை திரும்ப தராமல், வட்டியாக லட்சக்கணக்கான பணம் செலுத்த வேண்டும் என மிரட்டியதுடன், அடியாட்களை வைத்தும் தாக்கினார். இந்நிலையில் கடந்த மூன்று மாதமாக எனக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், என்னை வேலைக்கு வர வேண்டும் என மிரட்டி வருகிறார். இவ்வாறு என்னை கொத்தடிமையாய் நடத்தும் லோகநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது பாண்டை பெற்றுத்தர வேண்டும். எனது குடும்பத்தாருடன் நான் வசிக்கும் வகையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக தீக்குளிக்க முயன்றதாக கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: