கோவை, மார்ச் 5-
ஒரு வருடமாக ஓய்வூதியம் வழங்காமல் இழுத்தடிக்கும் அமைப்புசாரா நலவாரியத்தை கண்டித்து திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிஐடியு கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் ஆவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைப்புசாரா நலவாரியத்தில் கடந்த ஒரு வருடமாக வழங்கப்படாத ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். 2015 முதல் 2018 வரை 3 வருடத்திற்கு கல்வி உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த மனுக்கள் பணப்பயன்கள் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதேபோல் திருமண உதவித் தொகை, விபத்தில் மரணம், இயற்கை மரணத்திற்கான இழுப்பீடுகள் நலவாரியத்தின் செயல்பாடின்மையால் பயனாளிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட கண்கானிப்புக்குழு ஒரு முறையும் கூடாமல் உண்மைப் பயனாளிகளின் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுகிறது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயில் முன்பு சிஐடியு கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்படவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன்பின் சிஐடியு கோவை மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.வேலுசாமி தலைமையில் மற்றும் கைத்தறி நெசவாளர் சங்கத்தின் தலைவர் பரமசிவம், ராஜகோபால், ராமசாமி உள்ளிட்டோர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர். மேலும், இதேகோரிக்கைகளை வலியுறுத்தி கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள அமைப்புசாரா நலவாரிய அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: