கோவை, மார்ச் 4-
வன விலங்குகளால் ஏற்படும் சேதங்களுக்கான இழப்பீட்டைப் எளிதாக பெற கோவை வனக் கோட்டத்தில் ஆன்லைன் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி பெரியநாயக்கன்பாளையம், போளுவம்பட்டி உள்ளிட்ட ஏழு வனச்சரகப் பகுதிகள் உள்ளது. இப்பகுதிகளில் வன விலங்கு ஊடுருவல் என்பது தொடர் நிகழ்வாக உள்ளது. இதன்காரணமாக உயிர் சேதங்களும், பயிர் சேதங்கள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்த வனவிலங்குகளால் ஏற்படும் உயிர், உடமை, பயிர் சேதங்களே மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதும், அதற்கான இழப்பீடுகளை பெருவதற்கு பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்படுகிறது. இந்நிலையில், வனவிலங்குகளால் பாதிப்புள்குள்ளாகும் கிராமங்களில் வனத்துறையினர் ஆய்வை மேற்கொண்டனர். இதன்தொடர்ச்சியாக அப்பகுதி மக்கள் தெரிவித்த கருத்தையொட்டி தொய்வின்றி உடனுக்குடன் இழப்பீட்டுத்தொகையை வழங்க ஆன்லைன் திட்டத்தை கோவை வனத்துறையினர் வடிவமைத்து வருகின்றனர். தமிழகத்திலேயே முதல்முறையாக விரைவில் இத்திட்டம் கோவையில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை யானை ஊடுருவலே பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. யானைகளால் ஏற்படும் பயிர் சேதங்களை வேளாண்மைத்துறை மூலம், பயிர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள தொகைப்படி அளவீடு செய்யப்படும். பின்னர் கிராம நிர்வாக அலுவலர், வனத்துறையினர் ஆகியோரது அறிக்கைகள் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, உயிரிழப்பு ஏற்படும் போது, காவல்துறை அறிக்கை, பிரேதபரிசோதனை அறிக்கை, சட்ட நிபுணர்கள் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் உறுதி செய்து, ரூ.4 லட்சம் இழப்பீடு கொடுக்கிறோம். காயம் அடைந்தவர்களுக்கும் இதேபோன்ற நடைமுறையே பின்பற்றப்படுகிறது. இழப்பீட்டுக்கான விண்ணப்பங்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட சரகங்களில் இருந்து மாவட்ட வன அலுவலருக்கும், பின்னர் மண்டல வனப்பாதுகாவலருக்கும் அனுப்பி ஓரிரு மாத இடைவெளியில் நிதி வழங்கப்படுகிறது. இதனால் ஏற்படும் காலதாமதம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துகிறது. விண்ணப்பங்கள் தொலைந்து போகவும் வாய்ப்புள்ளது.

எனவே இப்பிரச்சனைகளை தவிர்க்க வனச்சரக அலுவலகங்களில் இருந்து ஆன்லைன் மூலமே இழப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். ஓரிரு நாட்களில் பயனாளிகளின் வங்கிக்கணக்குக்கு இழப்பீடு சென்று சேரும் என்பதால் விரைவில் இத்திட்டத்தை செயல்படுத்த இணையதளம் வடிவமைக்கப்பட்டு வருகிறது என்றனர்.

Leave A Reply

%d bloggers like this: