கோவை, மார்ச் 4-
கோவையிலிருந்து சிங்கப்பூருக்கு கேட்டமைன் ஹைட்ரோ குளோரைடை கடத்த முயன்ற மத்திய கப்பல்படை ஊழியர் உள்ளிட்ட இருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ‘சில்க் ஏர்லென்ஸ்’ விமானத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம்தேதி தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கோவை விமானத்தில் சிங்கப்பூர் செல்லும் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை தனித்தனியாக சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னை வண்ணாரபேட்டையை சேர்ந்தவரும் மத்திய கப்பல்படை ஊழியருமான செல்வமணியின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் அவருடைய உடமையில் தடைசெய்யப்பட்ட 14.5 கிலோ கேட்டமைன் ஹைட்ரோ குளோரைடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 1.5 கோடி. இந்தியாவில் விலங்குகளுக்கு மயக்க மருந்தாக பயன்படுத்தப்படும் கேட்டமைன் ஹைட்ரோ குளோரைடு, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் போதைப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதனால், கேட்டமைன் ஹைட்ரோ குளோரைடை இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதை மீறி கேட்டமைன் ஹைட்ரோ குளோரைடை சிங்கப்பூருக்கு கடத்த முயன்றை செல்வமணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

மேலும், செல்வமணிக்கு உதவியாக இருந்த கோவை விமான நிலையத்தில் பணிபுரிந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் கோவையை சேர்ந்தராமகிருஷ்ணன் என்பவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பின்பு இருவரும் அரசு பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை, கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நீதிபதி மதுரசேகர் முன்னிலையில் கடத்தல் வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நடந்தது.அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் ஆஜராகி வாதிட்டார். விசாரணையின் இறுதியில் செல்வமணி, ராமகிருஷ்ணன் இருவர் மீதான கடத்தல் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இருவருக்கும் தலா 5 ஆண்டு சிறை, தலா ரூ.25 ஆயிரம் அபராதம், அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.