கோவை, மார்ச் 4-
பெண்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்படும் விளம்பரங்களை மாநில அரசு தடைசெய்ய வேண்டுமென இந்திய மாணவர் சங்க மாணவிகள் மாநாட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் மாநாடு பி.ஆர்.புரம் பகுதியில் உள்ள கே.ரமணி நினைவரங்கத்தில் ஞாயிறன்று மாணவர் சங்க மாவட்ட நிர்வாகி காவ்யா தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைசெயலாளர் தீபக்சந்திரகாந்த் பங்கேற்று சிறப்புரையாற்றினார். மாநாட்டை வாழ்த்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட நிர்வாகி பாண்டியன் உரையாற்றினார். முன்னதாக மாணவிகள் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாணவிகள் பயிலும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இலவசமாக நாப்கின் வழங்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க அந்தந்த மட்டத்தில் தனியாக கண்கானிப்புக்குழுவை அமைக்க வேண்டும். பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக சட்டமாக்கப்பட வேண்டும். தொலைக்காட்சி மற்றும் சுவரொட்டிகளில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து வெளிவரும் விளம்பரங்களை மாநில அரசு தலையிட்டு தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாணவிகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டில் மாணவிகள் உபகுழுவின் அமைப்பாளராக காவ்யா மற்றும் துணை அமைப்பாளராக நித்யா மற்றும் 13 பேர் கொண்ட உபகுழு தேர்ந்தெடுக்கப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் கேப்டன் பிரபாகரன் உரையாற்றினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.