நாமக்கல், மார்ச் 4 –
பெண்கள் மீதான பாலியல் நடவடிக்கைகளை தடுத்திட பணியிடங்களில் பாலியல் புகார் கமிட்டி அமைக்க வேண்டுமென மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நாமக்கல்லில் கே.பி.ஜனகியம்மாள் நூற்றாண்டு விழா, அன்னை லட்சுமி நினைவுதினம், சர்வதேச பெண்கள் தின கருத்தரங்கம் ஞாயிறன்று மாவட்ட செயலாளர் ஆர்.அலமேலு தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் எம்.செல்வராணி முன்னிலை வகித்தார்.கருத்தரங்கில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமலாக்க வேண்டும். பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணியிடங்களில் பாலியல் புகார் கமிட்டி அமைக்க வேண்டும். நலவாரியங்களில் பெண்களுக்கு 50 வயதில் ஓய்வூதியம், பேரூராட்சிகளுக்கும் 100 நாள் வேலையை விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கருத்தரங்கில் மாதர் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.வாலண்டினா சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுச்சாமி வாழ்த்துரை வழங்கினர். இதில் மாநில துணை தலைவர் ஜி.சாவித்ரி, மாவட்ட தலைவர் ஆர்.திலகவதி, எஸ்.ஜெயகொடி உள்ளிட்ட ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் கே.சாரதா நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.