நாமக்கல், மார்ச் 4-
நாமக்கல், திருசெங்கோடு சாலையில் பல்வேறு ஊர்களில் பயணிகள் நிழல் கூடம் அமைக்கப்படாமல் இருப்பதால் பொது மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

நாமக்கல்லில் இருந்து திருசெங்கோடு வரை விபத்துக்களை தவிர்க்கவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் நான்கு வழி சாலையக பல கோடி நிதியில் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது இந்த சாலையின் பணிகள் நிறைவு பெற்று போக்குவரத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல்லில் இருந்து திருசெங்கோடு வரை இடையில் உள்ள பல்வேறு வழித்தட ஊர்களில் பயணிகள் நிழல் கூடம் அமைக்கப்படாமல் இருப்பதால் பேருந்து பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக நாமக்கல் திருசெங்கோடு சாலையில் உள்ள எர்ணாபுரத்தில் 100 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பயணிகள் நிழல் கூடம் அமைக்கப்படாமல் உள்ளதுடன் பழைய பயணிகள் நிழல்கூடம் முட்புதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு காட்சி பொருளாக உள்ளது. இப்பகுதியில் பயணிகள் நிழல்கூடம் இல்லாமல் பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள் பேருந்து வரும் வரை அமர இடமில்லாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

இதேபோல், இந்த வழித்தடத்தில் உள்ள மாணிக்கம்பாளையம், ராயர்பாளையம், வேலகவுண்டன்பட்டி, குமரமங்கலம், விவேகானந்தா கல்லூரி பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில் எங்குமே பேருந்து பயணிகள் வசதிக்காக நிழல் கூடமே அமைக்கப்படவில்லை. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பெண்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் கடும் வெயிலில் அமர இடமில்லாமல் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே நாமக்கல் திருசெங்கோடு நான்கு வழி சாலையில் இடையில் உள்ள பல்வேறு ஊர்களிலும் பயணிகள் நிழல் கூடம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து பொது மக்கள் கூறும்போது: நாமக்கல், திருசெங்கோடு நான்கு வழி சாலையில் அமைக்கப்பட்டு போக்குவரத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. இந்த சலையில் விரிவாக்கம் செய்யும்போது பொது மக்கள் அதிகம் பயன்படுத்தும் பயணிகள் நிழல் கூடம் மட்டும் பல ஊர்களில் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பொது மக்கள் பேருந்துக்காக கடும் வெயிலில் காத்துகொண்டு இருக்க வேண்டிய நிலைஉள்ளது. நாமக்கல்லில் இருந்து மோகனூர் வரை நான்கு வழி சாலை அமைக்கும்போது அந்த வழிதடத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் பயணிகள் நிழல்கூடமும் அமைக்கப்பட்டு பயணிகள் சிரமமின்றி அமர்ந்து கொள்ள இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் நாமக்கல்லில் இருந்து திருசெங்கோடுவரை நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டு போக்குவரத்திற்கு திறக்கப்பட்டும் இந்த வழிதடத்தில் உள்ள ஊர்களில் பயணிகள் நிழல் கூடம் அமைக்கப்படாமலும் பல்வேறு ஊர்களில் பழைய நிழல் கூடங்கள் புதுபிக்கப்படாமலும் பொது மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் முட்புதராக காட்சிஅளித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே, நாமக்கல் திருசெங்கோடு நான்கு வழி சாலையில் எர்ணாபுரம், மாணிக்கம்பாளையம், ராயர்பாளையம் உள்ளிட்ட அனைத்து வழித்தட ஊர்களிலும் பயணிகள் நிழல் கூடங்கள் புதிதாக அமைத்து பொது மக்களின் சிரமத்தை குறைக்க வேண்டும் என்றனர்.

ந.நி

Leave a Reply

You must be logged in to post a comment.