கோவை, மார்ச் 4-
திரிபுராவில் பாஜக பெற்ற வெற்றி மத்திய அரசு அதிகாரம், பணம், படை பலத்தை பயன்படுத்தி பறிக்கப்பட்ட வெற்றி எனவும் கம்யூனிசம் ஒருபோதும் தோற்காது என கோவையில் சிபிஐ மாநில செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட 23 வது மாநாடு கோவை ஆர்எஸ்புரம் நகரத்தார் மண்டபத்தில் சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்கள் நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு நாளான ஞாயிறன்று சிபிஐ மாநில செயலாளர் இரா.முத்தரசன் பங்கேற்றார். முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சாத்தியமல்ல என்ற நீர்வளத்துறை மத்திய அமைச்சர் நிதின்கட்கரியை மீண்டும் சந்திப்பது பயனற்றது. தமிழக அரசு மீண்டும் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி மத்திய அரசிற்கு அரசியல் நெருக்கடி தரும் வகையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். காவிரி நதிநீர் பிரச்சனையில் மோடி தலைமையிலான மத்திய அரசு துரோகம் இழைத்து வருவது கண்டிக்கத்தக்கது.

கர்நாடக தேர்தலில் அரசியல் ஆதாயத்திற்காக நடுநிலையாக இல்லாமல், குறுகிய நோக்குடன் செயல்பட்டு வருகிறது. காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண கோரி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். மேலும், தொடர் கடையடைப்பு, மத்திய அரசு அலுவலகங்களை முடக்குவது உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை எனில், தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், திரிபுரா மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். மத்திய ஆட்சி அதிகாரம், பணம், படை பலம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி மோடியால் பறிக்கப்பபட்ட வெற்றி. பிரிவினை வாதத்திற்கு எதிராக மேடைதோறும் பேசும் மோடி, திரிபுராவில் வெட்கமற்ற முறையில் பிரிவினை வாதிகளுடன் சேர்ந்து வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும் பாஜக பெற்ற மொத்தவாக்குகள் 9,89,875 இடதுசாரிகள் பெற்ற மொத்த வாக்குகள் 9,81,011 எனவே, வித்தியாசம் வெறும் 8,864 வாக்குகள்தான். கம்யூனிசத்தை ஒரு போதும் அழிக்க முடியாது. வகுப்புவாத சக்திகளை முறியடிக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் அனைத்து முற்போக்கு, மதச்சார்பற்ற அணிகள் வரும்காலத்தில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

முன்னதா, இம்மாநாட்டின் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளராக வி.எஸ்.சுந்தரம் தேர்வு செய்யப்பட்டார். இரண்டு நாள் நடைபெற்ற மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் கே.சுப்பராயன், மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.