புதுதில்லி:
திரிபுரா, மேகாலாயா, நாகாலாந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் சனிக்கிழமையன்று வெளியான நிலையில், திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
திரிபுராவில் தேர்தல் நடைப்பெற்ற 59 தொகுதிகளில், பாஜக 35 இடங்களையும், அதன் கூட்டணியில் இடம்பெற்ற பிரிவினைவாத கட்சியான ஐபிஎப்டி கட்சி 8 இடங்களையும் பிடித்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 9 லட்சத்து 81 ஆயிரத்து 11 வாக்குகளுடன், 42.6 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தும், எதிர்பாராத விதமாக 16 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளது. திரிபுராவில் ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக, 9 லட்சத்து 89 ஆயிரத்து 875 வாக்குகளுடன் மொத்தம் பதிவான வாக்குகளில் சுமார் 43 சதவிகிதத்தை கைப்பற்றியுள்ளது.

காங்கிரசின் வாக்குகளை முழுமையாக தன்பக்கம் திருப்பி இந்த வெற்றியை பாஜக பெற்றுள்ளது.கடந்த 2013 சட்டப்பேரவைத் தேர்தலில் 36.53 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி, இம்முறை 1.54 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று, 35 சதவிகித வாக்குகளை இழந்துள்ளது. இந்த வாக்குகள் அப்படியே பாஜக-வுக்கு சென்றுள்ளன.
பாஜக-வுக்கு கடந்த தேர்தலில் திரிபுராவில் கிடைத்த வாக்குகள் 1. 54 சதவிகிதம் மட்டுமே ஆகும். அத்துடன், காங்கிரசை கரைத்து அதன் 35 சதவிகித வாக்குகளையும், இவை தவிர, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும், பல்வேறு அதிகார துஷ்பிரயோகம் மூலமும் சுமார் 5 சதவிகித வாக்குகளை தனக்குச் சாதகமாக திருப்பியுள்ளது.

அதேபோல கடந்த தேர்தலில் காங்கிரசின் கூட்டணி கட்சியான ஐஎன்பிடி 7.59 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தது. இந்த வாக்குகள், தற்போது நடந்த தேர்தலில் கொஞ்சமும் சிதறாமல் பாஜக-வின் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி கட்சிக்கு சென்றுள்ளது.
இந்த ஐபிஎப்டி கட்சியானது, கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகள் வெறும் 0.46 சதவிகிதம் மட்டுமே. தற்போது அந்த வாக்குகளை (0.7) ஐஎன்பிடி கட்சி பெற்றுள்ளது.திரிபுராவில் இவ்வாறு பல்வேறு சித்து வேலைகளை அரங்கேற்றியதன் மூலம் பாஜக – ஐபிஎப்டி கட்சிகள் ஆட்சிக்கு வந்துள்ளன.

பெரும்பான்மைக்கு 31 உறுப்பினர்கள் போதுமானது என்ற நிலையில், பாஜக-வுக்கு 35 உறுப்பினர்கள் கிடைத்துள்ளதால், அந்த கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. தற்போதைக்கு ஐபிஎப்டி கட்சியின் ஆதரவு பாஜக-வுக்கு தேவையில்லை என்றாகி இருக்கிறது.

முதல்வர் மாணிக் சர்க்கார், அவர் போட்டியிட்ட தான்பூர் தொகுதியில் சுமார் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.மேகாலயா காங்கிரசுக்கு அதிக இடம்
60 இடங்களைக் கொண்ட மேகாலயாவில் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சி 21 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. தேசிய மக்கள் கட்சி 19 தொகுதிகளுடன் அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு பாஜக-வுக்கு வெறும் 2 இடங்களே கிடைத்துள்ளது. 17 இடங்களை சிறு கட்சிகள் பிடித்துள்ளன. இதனால் மேகாலயாவில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நாகாலாந்திலும் இழுபறி
நாகாலாந்து மாநிலத்தில், முடிவுகள் அறிவிக்கப்பட்ட இடங்களில், நாகா மக்கள் முன்னணி 24 இடங்களில் வென்று தனிப்பெருங்கட்சியாக வந்துள்ளது. பாஜக-வின் கூட்டணி கட்சியான தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி 14 இடங்களிலும், பாஜக 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தேசிய மக்கள் கட்சி, சுயேச்சை தலா ஓரிடத்தில் வந்துள்ளனர். இங்கு மீண்டும் நாகா மக்கள் முன்னணியுடன் சேர்த்து ஆட்சியமைக்க பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.