புதுதில்லி, மார்ச்

பொதுத்துறை வங்கிகளில் ஊழல்கள் நடைபெறுகிறது என்றால் அவை எதிர்காலத்தில் அவ்வாறு நிகழாமல் தவிர்ப்பதற்கான முறையில் அவற்றை முறையாக ஒழுங்குபடுத்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமே தவிர, அதையே காரணமாகக் கூறி அவற்றைத் தனியாருக்குத் தாரை வார்த்திட அரசாங்கம் திட்டமிடக்கூடாது. ஏனெனில் தனியார் வங்கிகளின் ஊழல்கள் என்பவை இவற்றைவிட மிகவும் மோசமானவைகளாக இருந்திருக்கின்றன என்பதே வரலாறாகும் என்று நாட்டிலுள்ள பொருளாதார அறிஞர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நாட்டிலுள்ள பொருளாதார மேதைகளான  பிரபாத் பட்நாயக், சி.பி.சந்திரசேகர், ஜெயதி கோஷ், வெங்கடேஷ் ஆத்ரேயா, அமியா குமார் பக்ஷ்சி, அமித் பாதுரி, ஜேஎன்யு பேராசிரியர்கள் விகாஷ் ராவல், பிரவீண் ஜா, ரோகித்,   அடுல் சூட், ரவி ஸ்ரீவஸ்தவா, பிஸ்வஜித் தார், உத்சா பட்நாயக் மற்றும் முன்னாள் நிதிச் செயலாளரும் திட்டக் கமிஷன் உறுப்பினருமான எஸ்.பி. சுக்லா, திட்டக் கமிஷன் முன்னாள் உறுப்பினர் அபிஜித் சென், ஸ்க்ரோல் இணைய இதழ் ஆசிரியர் சி.ராம்மனோகர் ரெட்டி, ஸ்டாடிஸ்டிகர் கமிஷன் முன்னாள் தலைவர் பிரோனாப் சென், கல்யாணி பல்கலைக் கழக பியாஸ்தேவ் தாஸ் குப்தா, அகமதாபாத் வளர்ச்சி மாற்றுக்கான மையத்தின்  இயக்குநர் மற்றும் பேராசிரியரான இந்திரா ஹிர்வே, கொல்கத்தா ஐஐஎம் பேராசிரியர் சுசில் கன்னா உட்பட 62 மேதைகள் கையொப்பம் இட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

“பொதுத்துறை வங்கிகளின் ஊழல்கள் நடைபெறுவதற்கு மிக முக்கியமான காரணம் அவற்றை முறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காததேயாகும். இது அனைத்து வங்கிகளையுமே பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன.  எந்த வழியிலாவது கொள்ளை இலாபம் ஈட்டவேண்டுமென்கிற கார்ப்பரேட்டுகளின் வெறித்தனமே இவ்வாறு பொதுத்துறை வங்கிகளில் மோசடி செய்து வங்கிகளின் பணத்தை மிகப்பெரிய அளவிற்குச் சூறையாடுவதற்கு இட்டுச் சென்றிருக்கின்றன.

வங்கிகள் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற இலட்சியத்தோடுதான் தனியாரிடம் இருந்த வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. ஆனால் அந்த குறிக்கோள் இன்னமும் முழுமையான அளவில் வெற்றிபெறவில்லை. அதற்காக வெகுதூரம் செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டபின், கிராமப்புறங்களில் ஏராளமான கிளைகள் தோற்றுவிக்கப்பட்டன. அவற்றின்மூலம் விவசாயிகளுக்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்பிரிவினருக்கும் கடன்கள் அளிக்கப்பட்டன. ஆனால் இதற்கு முற்றிலும் எதிர்மாறான விதத்தில் தனியார் வங்கிகள் பெரும் புள்ளிகளுக்கு மட்டுமே கடன்கள் அளித்து வருகின்றன.

வங்கிகளில் கடன்களைப் பெற்றுக்கொண்டு திருப்பிச் செலுத்தாது மோசடி செய்திடும் கார்ப்பரேட்டுகளின் பெயர்களை வெளியிட  வேண்டும் என்கிற கோரிக்கையை மத்திய நிதி   அமைச்சர் ஏற்க மறுத்துவருகிறார்.

பொதுத்துறை வங்கிகளைவிட தனியார் வங்கிகளில் ஊழல்கள் செய்வது மிகவும் எளிதாகும். இதற்கு மிகவும் சரியான உதாரணம் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இயங்கி வந்த தனியார் வங்கிகளாகும். இவற்றின் மோசமான நடவடிக்கைகளின் காரணமாகத்தான் 2008-09ஆம் ஆண்டின் மிகப்பெரிய நிதி நெருக்கடிக்கு இட்டுச் சென்றன.  இதன் காரணமாக அந்தந்த நாடுகளின் ஆட்சியாளர்கள் தங்கள் கருவூலத்திலிருந்து நிதியை அளித்து அவற்றைத் திவால் நிலைமைகளிலிருந்து காப்பாற்றின.

தற்போது நமதுநாட்டில் பொதுத்துறை வங்கிகளில் ஏற்பட்டிருக்கிற ஊழல்களுக்கும் மற்றும் வங்கிகள் எதிர்கொண்டுவரும் பல்வேறு வகைகளினான இழப்புகளுக்கும் கார்ப்பரேட்டுகள் இவ்வங்கிகளிடமிருந்து பெற்ற கடன் தொகைகளைத் திருப்பிச் செலுத்தாமல் அவற்றை செயல்படா சொத்துக்களாக மாற்றி வருவதே காரணங்களாகும். இவை நம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றன. ஆனால் இதற்காக, இதையே காரணமாகக் காட்டி, இவ்வங்கிகளைத் தனியாரிடம் தாரை வார்த்திடக் கூடாது. இன்றைய தினம் நாட்டில் பொதுத்துறை வங்கிகளில் இரண்டாவது பெரிய வங்கியாக இருந்து வந்த பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஏற்பட்டுள்ள ஊழலுக்கு பிரதான காரணம், வங்கித்துறையை போதுமான அளவிற்கு முறைப்படுத்தாததேயாகும். இது அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும்.

இதில் வேடிக்கை வினோதம் என்னவென்றால் இவ்வாறு பொதுத்துறை வங்கிகளில் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவந்த மோசடிப் பேர்வழிகளே இப்போது இவ்வங்கிகளை முழுமையாகத் தங்களிடம் தாரைவார்த்திட வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்திருப்பதுதான்.

பொதுத்துறை வங்கிகளைவிட தனியார் துறை வங்கிகள் செயல்பாடுகள் ஊழல்களுக்கும் மோசடிகளுக்கும் மிக எளிதாக வழிவகுக்கக்கூடிய விதங்களில் அமைந்திருக்கின்றன.   இதற்கு அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் இயங்கிய தனியார் வங்கிகள் மிகச் சரியான உதாரணங்களாகும். இவை கொள்ளை லாப வெறியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதால் வங்கித்துறையில் ஏற்படும் இடர் காப்பீடுகள் குறித்து இவை பெரியதாக அலட்டிக்கொள்வதில்லை. இதனால்தான் அவை 2008-09ஆம் ஆண்டில் மிகப்பெரிய நிதி நெருக்கடியைச் சந்தித்தன. இவற்றை  அந்தந்த நாடுகளில் உள்ள ஆட்சியாளர்கள் எப்படியாவது வங்கிகள் செயல்குலைந்து மூழ்குவதிலிருந்து அவற்றைத் தடுத்திட வேண்டும் என்பதற்காக, தங்கள் கருவூலத்திலிருந்து பெரும் நிதி உதவியை அளித்து அவற்றைக் காப்பாற்றினார்கள்.

இந்தியாவில்  வங்கிகள் 1969இல் தேசியமயமாக்கப்படுவதற்கு முன்பு, சராசரியாக 35 தனியார் வங்கிகள் ஒவ்வோராண்டும் தோல்வியைச் சந்தித்தன. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டபின்னர்தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

1990களில் நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள் கடைப்பிடிக்கப்பட்டபின்னர், தனியார்வசம் இயங்கி வந்த குலோபல் டிரஸ்ட் வங்கி, டைம்ஸ் வங்கி மற்றும் செஞ்சூரியன் வங்கி இழப்புகளை சந்தித்ததன் காரணமாக, பொதுத்துறை வங்கிகளுடன் அவை இணைக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டன. தற்போதும்கூட பல தனியார் வங்கிகள் செயல்படா சொத்துக்கள் காரணமாக என்ன செய்வது என்று தெரியாது விழிபிதுங்கி திண்டாடிக் கொண்டிருக்கின்றன.

தற்போதுள்ள வங்கி விதிமுறைகளின்கீழ் வங்கிகளில் ஏற்படும் நெருக்கடிகளை தனியார் வங்கிகளைவிட, பொதுத்துறை வங்கிகள் எளிதாக சரி செய்துவிடும்.

வங்கிகளின் நெருக்கடியை சமாளித்திட மத்திய நிதி அமைச்சர் உடனடியாகச் செய்யவேண்டிய காரியம், நாட்டிலுள்ள வங்கிகளில் கடன்களைப் பெற்றுக்கொண்டு திருப்பிச் செலுத்தாத மோசடி  பேர்வழிகளின் பெயர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வர உத்தரவிட வேண்டும்.

வங்கிகளின் விதிமுறைகளை மேலும் கறார்ப்படுத்தி, அவை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவதை உத்தரவாதப்படுத்திட வேண்டும். மாறாக, பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்குத் தாரை வார்த்தால் அது நிலைமைகளை மேலும் மோசமாக்கிடுவதற்கே இட்டுச் செல்லும்.

இவ்வாறு அறிஞர் பெருமக்கள் அரசாங்கத்தை எச்சரித்துள்ளனர்.

(ந.நி.)

Leave A Reply

%d bloggers like this: