குழித்துறை:
மருதங்கோட்டில் கூலி தொழிலாளி உயிரிழக்க காரணமான பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவிடில் தொடர் போராட்ட நடத்தப்படும் என்று கம்யுனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லசாமி கழுவன்திட்டையில் நடந்த அனைத்து கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.

மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு புதுக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (45) கூலி தொழிலாளி. இவரது மனைவி ரெத்தினம். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜன் கழுவந்திட்டை ஜங்ஷன் வந்தார். இவரை கழுவந்திட்டை ஜங்ஷனில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் தாக்கியதில் படுகாயமடைந்தார். இரண்டு கைகளும் உடைந்து படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர் அப்பகுதி வழியாக நடந்து செல்ல முயன்ற பொழுது திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார். ராஜனை தாக்கி படுகாயமடையச் செய்த பிரன்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை சேர்ந்த மணி என்ற சிவகுமார் மற்றும் ஷைஜூ ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் ராஜன் இறந்ததற்கு பிரன்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை சேர்ந்த மணி என்ற சிவகுமார் மற்றும் ஷைஜூ ஆகியோர் தான் காரணமெனவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டு ராஜனின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை சேர்ந்த ஆட்டோ மணி என்ற சிவகுமார் மற்றும் ஷைஜீ மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த ராஜனின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம், திமுக, காங். உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் கழுவந்திட்டை ஜங்ஷனில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் தலைமை வகித்தார். திமுக எம்.எல்.ஏ மனோதங்கராஜ், முன்னாள் எம்.எல்.ஏ லீமாரோஸ். சிபிஎம் மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, ராஜேஷ் குமார், காங். கட்சியை சேர்ந்த மோகனதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் நிர்வாகிகள் சிங்காரன், மைக்கேல் தாஸ், சசி குமார், பாலன், தங்கமணி. உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் செல்லசாமி பேசுகையில்: பாதுகாப்பளிக்க வேண்டிய காவல் துறை குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அப்பாவி மக்களை தாக்குகிறது. வாகன சோதனை என்ற பெயரில் பொதுமக்களை தாக்கி நிலைகுலைய செய்கின்றனர். பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பில் குற்ற வழக்ககளில் தொடர்புடைய கிரிமினல்களை சேர்த்துள்ளனர். அவர்களை வைத்து மாமுல் பிரிப்பது, வசூல் வேட்டையில் ஈடுபடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது பாதிக்கப்படும் நபர்கள் புகார் அளித்தால் புகார்கள் வாங்குவதில்லை. அத்துடன் அப்பாவிகளை மிரட்டி பணம் வசூல் செய்கின்றனர்.

மருதங்கோடு பகுதியில் உள்ள கூலித்தொழிலாளி ராஜனை தாக்கி படுகாயமடைய செய்து உயிரிழக்கும் நிலைக்கு ஆளாக்கி பிரண்டஸ் ஆப் போலீல் அமைப்பை சேர்ந்தவர்களை கைது செய்ய வேண்டும் இவர்கள் தாக்கிய போது புகார் அளித்தும் வழக்குபதிவு செய்யாத மார்த்தாண்டம் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கூலித்தொழிலாளியை தாக்கிய பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை சேர்ந்த இவர்கள் மீது 12 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் உள்ளது தெரிய வந்துள்ளது. இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் சிபிஎம் சார்பிலும், அனைத்து கட்சி சார்பிலும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.