மதுரை:
தமிழகத்திலுள்ள மாநில நெடுஞ்சாலைகளின் நிலை மற்றும் அதன் பராமரிப்புப் பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். “நெல்லையில் இருந்து தென்காசி வரை செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது; இந்த சாலையை தான், குற்றாலத்திற்கு செல்லும் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள ஆலங்குளம், புளியங்குடி, பாவூர்சத்திரம், போன்ற ஊர்களில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் எலுமிச்சை, போன்ற விவசாயப் பொருட்களை நெல்லை போன்ற இடங்களுக்கு கொண்டு செல்கின்றனர். இவர்களும் இந்த சாலையைத் தான் பயன்படுத்த வேண்டி உள்ளது. மேலும் இந்த சாலையை கொல்லத்திற்குச் செல்லும் கேரள மக்களும், அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், சாலை மிகவும் குண்டு குழியுமாக உள்ளதால், வெறும் 29 கி.மீட்டர் தூரமே உள்ள சாலையை கடப்பதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ஆகிறது.
எனவே, இந்த சாலையை மேம்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட வேண்டும். மேலும், இந்த சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ளது. அதனையும் செயல்படுத்த மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு, முன்பாக சனிக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில நெடுஞ்சாலைத்துறையின் நெல்லை மண்டலப் பொறியாளர் தரப்பில் 2 வழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

எனினும், நெல்லை-தென்காசி சாலை சீரமைப்பு பணிகள் குறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை செயலர் மார்ச் 16-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க கூறியதுடன், தமிழகத்திலுள்ள மாநில நெடுஞ்சாலைகளின் நிலை மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்தும் அன்றைய தினம் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
விசாரணையையும் மார்ச் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: