புதுதில்லி:
மாணிக் சர்க்காரை எதிர்த்துப்போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மிகவும் பின்தங்கியிருப்பதால் அவர் போட்டியிட்ட சில வாக்குச்சாவடிகளில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத்தும் சனிக்கிழமையன்று மாலை தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்து, மாணிக் சர்க்கார் போட்டியிட்ட சட்டமன்றத் தொகுதியில் மூன்று வாக்குச்சாவடிகளில் வாக்கெண்ணிக்கையை மீளவும் தொடரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். பாஜகவின் தூண்டுதல் காரணமாக அங்கே வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் ஆட்சேபணை தெரிவித்தனர்.

அப்போது சீத்தாராம் யெச்சூரி, தலைமைத் தேர்தல் ஆணையரிடம் அளித்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: திரிபுராவில் தன்பூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது குறித்தும் அதில் உடனடியாகத் தங்கள் தலையீட்டை வலியுறுத்தியும் இக்கடிதத்தை தங்களிடம் தருகிறோம். இது முதல்வர் மாணிக் சர்க்கார் போட்டியிட்ட தொகுதி. இத்தொகுதியில் 42, 43, 45 வாக்குச் சாவடிகளில் வாக்கெண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. பாஜக வேட்பாளர் மறுபடியும் இவ்வாக்குச்சாவடிகள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கோரியிருக்கிறார்.

இதற்கு அந்த வாக்குச்சீட்டுகளில் தங்கள் தேர்தல் ஏஜெ­ண்ட் கையெழுத்தில்லை என்று காரணம் கூறிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவற்றில் தேர்தல் அதிகாரி மற்றும் இதர கட்சிகளின் வாக்குச்சாவடி ஏஜண்டுகளின் கையெழுத்துக்கள் இருக்கின்றன. நிச்சயமாக இது வாக்கு எண்ணிக்கையைத் தடுத்து நிறுத்தி சீர்குலைத்திடும் நடவடிக்கையாகும். பாஜக வேட்பாளர் மிகவும் பின்தங்கியிருப்பதால் இவ்வாறு அவர் குதித்துக்கொண்டிருக்கிறார்.
மேலும், ஐடிபிபி உதவியுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற இடங்களில் வீற்றிருந்த எங்கள் கட்சி ஏஜெண்டுகளை துரத்தி அனுப்பியிருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. தற்போது மாணிக் சர்க்கார் மட்டுமே அங்கேஇருப்பதால் அவரை அவர்கள் கேரோ செய்து, கேலி செய்துவருகின்றனர். நிச்சயமாக இது வாக்கு எண்ணிக்கை நெறிமுறைகளை மீறும் செயலாகும்.

தாங்கள் இவற்றின்மீது உடனடியாகத் தலையிட வேண்டும். தொடர்ந்து அங்கே வாக்கு எண்ணப்படுவதை உத்தரவாதப்படுத்திட வேண்டும். அதனுடன் விவிபிஏடி துண்டுச் சீட்டுகளுடன் வெளிப்படைத்தன்மையுடன் அவை நடந்திட வேண்டும்.
நிலைமைகள் மேலும் மோசமாவதற்குள் உடனடியாகத் தாங்கள் இதில் தலையிட வேண்டும் என்று கோருகிறோம்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் தான் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார்.
(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.