ஒரு கவிதைப் புத்தகம் அப்படி என்ன செய்துவிட முடியும் ?
இந்தக் கவிதைத் தொகுப்பை படிக்க ஆரம்பிக்கும் முன் மேலே உள்ள
கேள்விக்கு சொன்ன பதிலை புத்தகத்தைப் படித்தபின் நிச்சயம் சொல்லவே முடியாது .
மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் என ஐந்து மொழி சார்ந்த 17 கவிஞர்களின் 54 கவிதைகள், “ கைர்லாஞ்சியின் காலத்தில் காதல்,” எனும் தலைப்பில் தொகுப்பாக்கப்பட்டுள்ளது.

“தலித் பெண் கவிஞர்களின் கவிதைகள்.” என்கிற துணைத் தலைப்பு நம்மை ஈர்க்க , உள்ளே நுழைந்தால் ஒவ்வொரு கவிதையைப் படித்த பின்னும் மனதை அது என்னமோ செய்கிறது . அடுத்த கவிதையை உடனே படிக்க முடியவில்லை.சற்று நேரம் இடைவெளிவிட்டு அடுத்ததைப் படித்தால், இன்னும் வேகமாய் இதயம் துடிக்கிறது.ஒவ்வொரு கவிதையும் வலியை, ரணத்தை மட்டுமே சொல்லவில்லை. அது நம்மைத் துடிக்க வைக்கிறது. மூளைக்குள் ஒரு வெடிகுண்டை வீசிச்செல்கிறது .

“ சுதந்திரமென்றால் என்ன ? எனக்கு இன்னும் சொல்லப்படவில்லை .பெண் என்றால் என்ன?
எனக்கு இன்னும் சொல்லப்படவில்லை,” என்கிற அவரின் ஆதங்கம் இன்றும் அப்படியே தானே உள்ளது .

“இனி நான் , ‘ வாழ வேண்டும்,’ என்று கூக்குரலிடமாட்டேன் இனி நான் சாவதற்காகவே வாழ்வேன் .கிராமம் எரியும் சுடுகாடாகட்டும் என்னுடன் ஒரு பறைநாய் போல் வாழமாட்டேன் எங்குமே !” மீனா கஜ்பயேவின் சீற்றம் நியாயம் .

“ஒவ்வொரு கவிதைக்குப் பின்னும் ஒரு கதை இருக்கிறது .ஒரு வாழ்க்கை இருக்கிறது . ஒரு வரலாறு இருக்கிறது .” என்று சுகிர்தராணி தரும் வாக்கு மூலம் வெறும் வார்த்தை அல்ல. உண்மை; உண்மையைத் தவிர வேறில்லை .

“ நீங்களே கூறுங்கள் இந்நாட்டில் தீண்டாமை வாடையேறாத தற்கொலைகள், கொலைகள்கூட
சாத்தியமா?” சல்லப்பள்ளி ஸ்வரூபராணி சவுக்கால் அடித்து கேட்கிறார் . இன்று பல்கலைக் கழகங்கள்கூட இக்கேள்விக்குத் தப்பமுடியாதே !

ஒரு, ‘முந்தானை.’ விலகும் நேரம் கள்ளப்பார்வை , பார்க்கும் ஆணின் பார்வைக்கும், முந்தானையூடே வாழ்வு முழுவதையும் தரிசிக்கும் ஜூபக்க சுமத்ரா பார்வைக்கும்தான் எவ்வளவு பெருத்தவேறுபாடு ?

“மாட்டுக்கறி – எங்கள் வாழ்வு” என்ற கோகு ஷியாமளா கவிதை சமூக
வலைதளம் வழி ஏற்கெனவே நம் போர்க்கருவியானது . இங்கு படிக்கை
யில் இன்னும் அதனுள் பலப்பல செய்திகள்.

“ உடலைத் திறக்காதே உன் நீர்நிலைக்குள்ளும் அவனுடைய தூண்டிற் கண்கள் பதுங்கி வரலாம்” விஜிலா சிறப்பாடுவின் எச்சரிக்கை நம் நாகரீகத்தின் மீது சவுக்கால் அடிக்கிறது .

சுகிர்தராணி , உமாதேவி , ஜெயராணி ,அரங்க மல்லிகா ஆகியோரின் தமிழ்க்கவிதைகள் ;
“திண்ணியங்களில் என் வாயில் திணிக்கப்பட்ட மலத்தின் ஒரு கவளம்” என அவலமும் ;
“ இந்த சேரி வாழ்வு உனை அனுபவங்களுக்கு பழக்கவில்லை மகளே !

சாவுக்கு பழக்குகிறது” என்கிற எதார்த்த கசப்பும் ; “மேல் வயல் நிரம்பினால் கீழ் வயல் நீர் பெறும் மேற்புறத்தில்… காணி நிலம் என் கனவுகளில் ..” என விரியும் கனவும்;
“ யாரேனும் கேட்க நேர்ந்தால் பளிச்செனச் சொல்லிவிடுகிறேன் பறச்சி என்று” என நம்பிக்கையும்; “ திடுக் திடுக்கென / அதிர்ந்து அழும் இதயத்திற்கு / ஆறுதல் தந்தது / எங்கள் பறையே!” என்கிற கம்பீரமும்; எல்லாம் நம் நெஞ்சை பிசையும் .

“வலி, அவமானம், சீற்றம், போர்க்குரல், கண்ணீர், அறவுணர்வு, எல்லை கடத்தல், விரிவாகுதல், நேசம்,மன்னிப்பு, நீதி, பீமா எனும் அம்பேத்கர், சித்தார்த்தன் எனும் புத்தன், அவன் மூடிய விழிகளின் கீற்றில் ஒளிரும் யசோதரா என பல ஒளி பொருந்திய பரிமாணங்களைக் கொண்ட அரிய புத்தகமாக இது அறியப்பட வேண்டும் என்பதே எமது பிரயாசை” என முன்னுரையில் பிரேமா ரேவதி மொழிந்திருப்பது ஆசையாக முடியவில்லை ; . கைகூடி இருப்பதற்கு இந்நூல் சாட்சி .

மராத்தி , தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் என மொழி எது வாயினும் தலித் பெண்களின் வாழ்க்கைப்பாடு ஒன்றாகவே இருக்கக் காண்கிறோம் .தலித் விடு தலை ,பெண்விடுதலை , சாதி ஒழிப்பு,சமத்துவம் இவை நான்கும் பின்னிப்பிணைந்தவை .ஒன்றை மட்டுமே தனித்து பெற முடியாது . இக்கவிதைகள் அதற்கு உந்தித்தள்ளும் ஐயம் இல்லை .
இந்நூலை வாசித்து முடித்தபின் உள்ளுக்குள் சமூகக் கோபம் நிச்சயம் சூல் கொள்ளும் . ஒரு நூலின் வெற்றிக்கு இதைவிட வேறென்ன வேண்டும்?

கைர்லாஞ்சியின் காலத்தில் காதல்
தலித் பெண் கவிஞர்களின் கவிதை
வெளியீடு : மைத்ரி புக்ஸ் ,
49 பி , ஒமேகா பிளாட்ஸ் , 4 வது லிங்க் சாலை,
சதாசிவம் நகர் ,மடிப்பாக்கம் ,
சென்னை – 600 091.
பக் : 152 , விலை : ரூ .140/

சு.பொ.அகத்தியலிங்கம்

Leave a Reply

You must be logged in to post a comment.