=====கண்ணன் ஜீவா====                                                                                                                                                                        விளையாட்டுத் துறை இன்றும் பல பெண்களுக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறது. சாதிக்க வேண்டும் என்ற ஆசையுடன் இந்த களத்திற்கு வந்த பல பெண்கள் பல்வேறு சோதனைகளை சந்தித்துள்ளனர். அந்த சோதனைகளை எல்லாம் மறக்கச்  செய்யும் வலிமை பாராட்டுக்கு மட்டுமே உண்டு. இந்தப் பாராட்டுகூட  இன்னும் பல பெண்களுக்கு கிடைக்கவில்லை என்பது சோகமான விஷயம்.ஒவ்வொரு முறையும் களத்தை விட்டு  வெளியே வரமுயற்சி செய்யும் போது பாராட்டு கூட அவர்களுக்கு கை கொடுக்காத காரணத்தால் மீண்டும் விளையாட்டில் முழ்கி விடுகின்றனர். இதை எல்லாம் தாண்டி “ஆல் தி பெஸ்ட்’’ என்ற ஒரு வார்த்தையை மட்டும் கெட்டியாக பிடித்துக்கொண்டு உலகம் முழுவதும்  சென்று வென்று  பல சாதனைகளைப் படைத்த  பெண்கள்  பலர்  இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் பெரும்பாலும் அன்றாடம் நாம் அறிந்த  விளையாட்டுகளில் சாதித்தவர்களே.
இவர்களைத் தவிர்த்து ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த பல விளையாட்டுகளில் பெண்கள் தங்களின் முத்திரையை பதித்து வருகிறார்கள். அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கும்,பேசுவதற்கும், பாராட்டுவதற்கும் இந்த மாதம் தான் உகந்தது. எனெனில் இந்த மாதம் 8 ஆம் தேதி தான் சர்வதே மகளிர் தினம் கொண்டாப்படுகிறது.
நீர் சறுக்கு                                                                                                                                                                                 மும்பையில் பிறந்து இதழியல் படித்து கர்நாடகாவில் வசித்து வரும் இஷிதா மாளவியா இந்தியாவின் முதல் நீர் சறுக்கு வீராங்கனையாவர்.இவரும் இவரின் நண்பரும் சேர்ந்து   கர்நாடகவில் உள்ள முல்கி கடற்கரையில் நடத்திவரும் நீர் விளையாட்டு அகாடெமி தான் இந்தியாவின் முதல் நீர் சறுக்கு பயிற்சி மையமாகும். இதனால் இவரை நீர் சறுக்கு விளையாட்டின்  விளம்பர தூதராக அது தொடர்பான உபகரணங்களை தயாரிக்கும் அமெரிக்காவின்  குயிக் சில்வர் நிறுவனம் அறிவித்துள்ளது. 
ரெஸ்லிங்                                                                                                                                                                                 டபிள்யூ.டபிள்யூ.இ ரெஸ்லிங் போட்டியில் கலந்து கொள்ளும் முதல் இந்திய வீராங்கனை கவிதா தேவி. ஹரியானா மாவட்டத்தில் பிறந்த இவருக்கு சிறு வயது முதல் பளு தூக்கும் விளையாட்டில் ஆர்வம்.இதனால் அதை முறையாக பயின்று  2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பளுதூக்குதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். இதன் பிறகு ரெஸ்லிங்கிற்கு மாறிய இவர் 2016 ஆம் ஆண்டு முதல் “ தி கிரேட் களரியன்’’ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவருகிறார்.
பார்முலா ஒன்                                                                                                                                                                        சென்னையின் சாலைகளில் 13 வயதில் கார் ஓட்டத் தொடங்கிய அலிஷா அப்துல்லா இன்று பார்முலா ஒன் கார் பந்தயங்களில் பறந்து கொண்டு இருக்கிறார்.தேசிய அளவில் நடைபெறும் கார் பந்தயங்களில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் பெண் என்ற  சாதனையை 2004 ஆம் ஆண்டு இவர  படைத்தார். அதைத் தொடர்ந்து பார்முலா ஒன் கார் பந்தயங்களிலும் கலந்து கொண்ட முதல் இந்தியப் பெண் என்ற சாதனையையும் தன் வசமாக்கிக் கொண்டார். 
பாடி பில்டிங்                                                                                                                                                                          ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ள பாடி பில்டிங் போட்டியில் மூன்று முறை பதக்கம் வென்றவர் தான் மம்தா தேவ். மனிப்பூரைச் சேர்ந்த இவர் முதன் முதலாக 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன் போட்டியில் வெண்கலம் வென்று பாடி பில்டிங் போட்டியில் சர்வதேச அளவில் முதல் பதக்கம் வென்ற பெண் என்ற சாதனையைப் படைத்தார்.இதைத் தொடர்ந்து  நடைபெற்ற ஆசியப்  போட்டியிலும் வெண்கலம் வென்றார். இதன்பிறகு 2014 மற்றும் 2015 உலக சாம்பியன் போட்டியிலும் வெண்கலப் பதக்கத்தை தன்வசமாக்கினார். 
போக்கர்                                                                                                                                                                                சீட்டு கட்டுகளை வைத்து விளையாடும் போக்கர் விளையாட்டை முறையாக கற்றுக் கொண்டு பல சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்ட முதல் பெண் தான் முஸ்கன் சேத்.நான் போக்கர் விளையாட்டு தேர்ந்தெடுக்க வில்லை. அதுதான் என்னை தேர்ந்தெடுத்தது என்று கூறும் இந்த 28 வயதான டில்லி பெண் ஒரு சமூக சேவகரும் கூட. 
ஐஸ் ஹாக்கி                                                                                                                                                                                  2016 ஆம் ஆண்டு இந்திய பெண்கள் ஐஸ் ஹாக்கி அணி சர்வதேசப் போட்டியில் விளையாடப் தகுதிப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆசிய சேலஞ்சர் கோப்பையில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியவில்லை.இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு சர்வதேச ஐஸ் ஹாக்கி பெடரேசன் சேலஞ்ச் கோப்பைக்கான ஆசியப் போட்டியில் பிலிப்பைன்ஸ் அணியை எதிர்கொண்டது.  இதில் 4-3 என்று வெற்றிப் பெற்று சர்வதேச ஐஸ் ஹாக்கி வரலாற்றில் முதல் வெற்றியை பதிவு செய்து வரலாற்று  சாதனையை பதிவு செய்தது.
மேலே பார்த்தவர்கள் மட்டுமல்லாமல் விளையாடுத் துறை சாதித்த அனைத்து பெண்கள் அந்த நிலையை அடைய எடுத்த முயற்சிகள், தாண்டிய சோதனைகள் உள்ளிட்டவைகள் அனைத்து கற்பனைக்கு அப்பாற்பட்டது. எனவே குடும்பம்,  உடல் தொடர்பான பிரச்சனைகள், பொருளாதாரப் பிரச்சனைகள் எல்லாவற்iயும் சாதித்து கொண்டிருக்கும் இவர்களுக்கு நிகர் இவர்களே.
தெரிந்தவர்களும் சாதனைகளும்:
தீபா மாலிக் – பாராலிம்பிக் போட்டியில் முதல் பதக்கம்
பி. வி. சிந்து – ஒலிம்பிக் போட்டியில் முதல் வெள்ளிப் பதக்கம்
கர்ணம் மல்லேஸ்வரி – பளுதூக்குதல் போட்டியில் முதல் ஒலிம்பிக் பதக்கம்
ஹினா சிந்து  – உலக சுப்பாக்கி சுடுதலில் முதல் தங்கம்
கீதா பேகத் –  காமல்வெல்த் மல்யுத்தத்தில் முதல் தங்கம்
சாய்னா நெய்வால் – ஒலிம்பிக் பேட்மிண்டனில் முதல் பதக்கம்
மேரி கோம் –  ஆசிய பாக்சிங் போட்டியில் முதல் தங்கம்
சாக்ஷி மாலிக் –  ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் முதல் பதக்கம்
தீபா கர்மாகர் –  ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டியில் 4வது இடம் பிடித்தவர்.
மிதாலி ராஜ் –  கிரிக்கெட் போட்டியில் 6000 ஆயிரம் ரன்களை கடந்தவர்
சானியா மிர்சா – சர்வதேச  டென்னிஸ் தரவரிசையில் முதல் இடம் பிடித்தவர்
பி. டி. உஷா –  தடகளத்தில் ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு முதன் முதலாக தகுதி பெற்றவர்
ஜூலான் கோஸ்வாமி – ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகளை  வீழ்த்தியவர்

 

Leave a Reply

You must be logged in to post a comment.