“கலகத்துக்கு அழைக்கும் இந்த வாழ்க்கையை எதிர்கொள்ள நமது சக்தியை திரட்டிக் கொள்ள
வேண்டும்” என தோழர் ச.தமிழ்ச்செல்வன் “அவ்வப்போது எழுதிய நாட்குறிப்புகள்” எனும்
நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய அரசியல், சமூகம், பண்பாடு, பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் எளிய மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் பெரும் தாக்குதலை தொகுத்துள்ளது. இதனை மாற்றிட தன்னால் எதுவும் செய்ய முடியாது என்ற அவநம்பிக்கை யை உருவாக்கி வருகிறது பாசிச அரசியல். இதன்மூலம் தன்னுடைய அதிகார பிரம்மாண்டத்தை பல தளங்களில் நிறுவி வருகிறது.

தளத்தில் ஏற்பட்டுள்ள முற்போக்கு குணாம்சங்களைக்கூட மறுதலித்து பிற்போக்கான பாதையில் இழுத்துச் செல்ல வெறி கொண்டு அலைகிறது. இந்நிலையில் “அவ்வப்போது எழுதிய நாட்குறிப்புகள்” எனும் கட்டுரை கள் தொகுப்பு நமக்குப் புதிய நம்பிக்கை
யையும், எதிர்காலத்தையும் காட்டுவது மட்டுமல்ல; நமது சக்தியை திரட்டிக்கொள்ள உந்துதலையும் தருகிறது.

இந்நூலில் இருபத்தியோரு குறிப்புகள் உள்ளன. இதில் ஒரு குறிப்பின் தலைப்பு வாழ்வனுபமும், வாசிப்பனுபவமும் என்று உள்ளது. ஆனால் இத்தலைப்பு இந்த புத்த
கத்தில் உள்ள அனைத்து குறிப்பு கள், கட்டுரைகள், முன்னுரைகள், அஞ்சலிக்குறிப்புகள் என அனைத்திற்கும் பொருந்தக் கூடியதாகவே உள்ளது.

தன்னுடைய மிகச் செறிவான கருத்துக்களை சக தோழர்களுக்கு கடத்துவதில் இப்புத்தகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது எனலாம். ஏனெனில் இதில் குறிப்பிடப்பட்டுள்ள நூல்களையும், எழுத்தாளர்களும் கவனத்துக்குரியவர்களாக மாற்றி
விடுகிறார் நூலாசிரியர். எழுத்தாளர்கள் காப்ரியேல் மார்க்வெஸ், வ.சுப. மாணிக்கனார், சு.வெங்கடேசன், கோணங்கி, பெருமாள்முருகன், கோபிகிருஷ்ணா ஆகியோரின் படைப்புகளையும் சிறப்பாக கவனப்படுத்தியுள்ளார்.

வரலாற்றில் வெளிச்சம்படாத படைப்பாளியாக, கொள்கை வழி நின்று மகத்தான பாடல்களை வடித்தெடுத்த கவிஞர் நவகவி நூலின் முன்னுரை குறிப்பிடத்தக்கது.“கால்களும். கைகளும்” எனும் குறிப்பில் தோழர் கோ.வீரய்யனை பற்றி மிக உணர்வுப்பூர்வமாக பதிவு செய்திருப்பது அர்த்தப்பூர்வமான செறிவினைத் தந்துள்ளது. 60 ஆண்டு களுக்கு மேலான பொது வாழ்க்கை முழுவதும் ஓடிய கால்கள் ஓய்வைக் கோரிய போதெல்லாம் அவர் தந்த தில்லை. சுயநல மறுப்பில் வளர்ந்த இயக்கவாதியல்லவா ? என்ற கேள்வி மனதில் மிகப்பெரிய குற்றவுணர்வை உருவாக்குகிறது.

அதே சமயத்தில் மகத்தான இயக்கத்தின் ஊழியன் எனும் பெருமிதத்தையும் ஒரு சேர தந்து விடுகிறது. குற்ற உணர்வு, பெருமிதம் இரண்டுமே இயக்கத்திற்கான உந்து சக்தியாகும். இதனை தன்னுடைய எழுத்தின் மூலம் முழு வீச்சாக உணர வைத்துள்ளார்.

வாசிப்பு குறித்து குறிப்பிடத்தக்க தன்னுடைய அனுபவங்களை சிறப்பாக பதிவு செய்துள்ளார். புதிய புத்தகங்களை அறிமுகம் செய்வது, புத்தகத்தின் சாராம்சத்தில் உள்ள கருத்துக்கள், உருவம், உள்ளடக்கம் பற்றிய விவாதங்கள், வாசிப்பு தளத்தில் குழந்தைகள் மத்தியில் மேற்கொண்ட பிரத்யேகமான முயற்சிகளுடன், அதன் சுகமான அனுபவங்களையும் ஒருசேர தொகுத்து அளித்துள்ளார். இவையெல்லாம் வாசிப்பின் மீதான நேசத்தை, புத்தகங்களின் மீதான காதலை மேலும் ஒரு படி உயர்த்திட உதவிபுரிகிறது.

இன்றைய சூழலில் வகுப்புவாத காற்று எனும் கட்டுரை மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். வகுப்புவாதம் மேற்கொள்கிற யுக்தியை நம்முன் வைத்து, அதற்கெதிரான மாற்று நடவடிக்கையை மேற்கொள்ளக் கோருகிறது. வகுப்புவாதம் குறித்த பிபின் சந்திராவின் நூல் பற்றிய சிறப்பான அறிமுகமாக உள்ளது. இதனுடன் தாழிடப்படாத கதவுகள் நூலின் முன்னுரையும்இந்த சிறுகதை தொகுப்பை அவசியம் வாசிக்கத் தூண்டுகிறது. தொழிற்சங்கப் பயிலரங்கத்தில் நிகழ்த்திய உரையாடல், அனுபவங்களின் தொகுப்பு என இன்னும் எழுதிட ஏராளமான அம்சங்கள் உள்ளன.

அதேபோல இத்தொகுப்பில் உள்ள பெண்களின் இரண்டாம் தர வாழ்க்கை, சூழல், நெருக்கடிகள் குறித்தும், முகத்திலறையும் உண்மைகள், திருநங்கையர் உலகைப்புரிந்து கொள்ள, ஆழ் (ஆணாதிக்க) மனதின் குரூர வெளிப்பாடுகள் உள்ளிட்ட கட்டுரைகளைப் பற்றி தனியாக ஒரு கட்டுரை எழுதலாம். இன்றைய சமூகத்தில் முக்கியத்துவம் பெறாத, அதேசமயத்தில் மிகவும் முக்கியத்துவமிக்க உண்மைகளை உரக்கச் சொல்லி, சமூகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பக்கூடிய தாக உள்ளது. முற்போக்கான சமூக மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரும் தன்னுடைய செயல்பாட்டை மேம்படுத்த வாசிக்க வேண்டிய நிகழ்கால வரலாற்றுக்குறிப்புகள் இவையாகும்.

அவ்வப்போது எழுதிய நாட்குறிப்புகள்
ஆசிரியர்: ச.தமிழ்ச்செல்வன்
வெளியீடு: பாரதிபுத்தகாலயம்
7, இளங்கோசாலை, சென்னை -600 018
பக்: 256, விலை : ரூ. 250/-
தொ.பேசி: 044 – 24332924

எஸ்.பாலா

Leave a Reply

You must be logged in to post a comment.