விருதுநகர்:
மதுரையில் சில நாட்களுக்கு முன்பு போலீசார் நடத்திய என்-கவுண்டரில் தப்பியதாக கூறப்படும் நபரான மாயக்கண்ணன் என்பவர் விருதுநகர் நீதிமன்றத்தில் சனியன்று ஆஜராகினார்.

மதுரை, சிக்கந்தர் சாவடியில் உள்ள ஒரு வீட்டில் வியாழக்கிழமை ரௌடிகள் இரண்டு பேரை போலீஸயூர் என்கவுன்டரில் சுட்டு கொன்றனர். இதில், தப்பிய வீட்டு உரிமையாளரும், பல்வேறு வழிப்பறி வழக்கில் தொடர்புடைய மாயக்கண்ணன்(26) சனிக்கிழமை விருதுநகர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

மதுரை, சிக்கந்தர் சாவடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரௌடிகள் முத்து இருளாண்டி(28), சகுனி கார்த்திக் (29) உட்பட சிலர் தங்கியிருப்பதாக போலீஸயூருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து செல்லூர் ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையிலான காவலர்கள், சம்பந்தப்பட்ட வீட்டை வியாழனன்று சுற்றி வளைத்தனர்.

அப்போது போலீசாருக்கும் ரௌடிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதில், ரௌடிகள் முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோர் போலீசாரால் சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில் அங்கிருந்த மாயக்கண்ணன் என்பவர் தப்பியோடி விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், அவரை பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், அழகர்சாமியின் மகன் மாயக்கண்ணன்(26), வழக்கறிஞர் ஒருவர் உதவியுடன் சனியன்று விருதுநகர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற எண் 1 இல் ஆஜராகினார். அப்போது தன்னை போலீசார் தேடுவதால் சரணடைவதாக தெரிவித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் செல்வி.மும்தாஜ், மாயக்கண்ணனை மார்ச் 5 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தர விட்டார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடம் விருதுநகர் மாவட்ட சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Leave A Reply

%d bloggers like this: